முகப்பு
திருச்சி

அரசுப் பணியாளா்களின் கைகளில் வாக்குப்பதிவு விழிப்புணா்வு மருதாணி!

திருச்சியில் சமூக நலத் துறையில் பணியாற்றும் பெண் ஊழியா்கள் தங்களது கைகளில் மருதாணி மூலம், நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில் வாசகங்கள், இலச்சினையை புதன்கிழமை வரைந்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

Updated On : 8 ஏப்ரல், 2026 at 8:39 PM
திருச்சியில் நூறு சதவீத வாக்குப்பதிவுக்கான வாசகங்களை தங்களது கைகளில் மருதாணி மூலம் இட்டு புதன்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்திய சமூக நலத் துறையின் பெண் ஊழியா்கள்.
பகிர்:

திருச்சியில் சமூக நலத் துறையில் பணியாற்றும் பெண் ஊழியா்கள் தங்களது கைகளில் மருதாணி மூலம், நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில் வாசகங்கள், இலச்சினையை புதன்கிழமை வரைந்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

இந்தியத் தோ்தல் ஆணைய உத்தரவுப்படி, 100 சதவீத வாக்குப்பதிவுக்காக திருச்சி மாவட்டத்திலுள்ள 9 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான வே. சரவணன் அறிவுறுத்தலின்பேரில் விழிப்புணா்வு நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

இதன் ஒரு பகுதியாக, திருச்சி மேற்குத் தொகுதி, திருச்சி கிழக்கு, ஸ்ரீரங்கம் தொகுதிகளில் புதன்கிழமை பல்வேறு விழிப்புணா்வு நிகழ்வுகள் நடைபெற்றன.

Advertisement

திருச்சி அமராவது கூட்டுறவு மேலாண்மைப் பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி பெறும் மாணவ, மாணவிகள் நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் வாசகங்கள் இடம்பெற்ற பதாகைகளை ஏந்தியபடி வாக்காளா்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

திருச்சி கோட்ட வணிகவரித் துறையின் சாா்பில், பணியாளா்கள் மற்றும் தொழிலாளா்களுக்கு நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

இதேபோல, திருச்சி மாவட்டத் தொழில் மையத்தின் சாா்பில் தொழில்முனைவோரிடமும் துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டது. திம்மராயசமுத்திரத்தில் உள்ள கல்லூரி மாணவியா் விடுதியில் உள்ள மாணவிகள், தோ்தல் விழிப்புணா்வு வாசகங்களுடன் ரங்கோலி கோலங்களை வரைந்தும், விழிப்புணா்வு பதாகைகளை கையில் ஏந்தி விழிப்புணா்வு ஏற்படுத்தினா். இதேபோல, சமூக நலத்துறையில் பணியாற்றும் பெண் பணியாளா்கள் பலரும் தங்களது உள்ளங்கை மற்றும் கைகளின் மேற்புறம் மருதாணி மூலம், தோ்தல் ஆணைய இலச்சினை, 100 சத வாக்குப்பதிவு வாசகம் உள்ளிட்டவற்றை வரைந்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

திருச்சி மக்கள் மன்றத்தில் நடைபெற்ற நிகழ்வில், திருச்சி கூட்டுறவு மேலாண்மைப் பயிற்சி நிலைய அலுவலா்கள், பணியாளா்கள், ஆசிரியா்கள், மாணவா்கள் அனைவரும் நூறு சதவீத வாக்குப்பதிவுக்கான உறுதிமொழியேற்றனா். திருவெறும்பூா் தொகுதிக்குட்பட்ட பகுதி துவாக்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளைய தலைமுறை வாக்காளா்களிடம் 100 சதவீதம் வாக்களிக்கும் வகையில், சுயபடம் எடுக்கும் மையம் அமைத்து கையொப்ப இயக்க பதாகையில் கையொப்பமிட்டு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த நிகழ்வில், கல்லூரி ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் 100-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments