முகப்பு
திருச்சி

ஜனநாயகத்துக்கு எதிரானது தொகுதி மறுவரையறை: துரை வைகோ எம்பி பேட்டி

ஜனநாயகத்துக்கு எதிரான செயலாக தொகுதி மறுவரையறையை அமல்படுத்த மத்திய பாஜக அரசு திட்டமிட்டிருப்பதாக மதிமுக முதன்மைச் செயலரும், திருச்சி மக்களவை உறுப்பினருமான துரை வைகோ தெரிவித்தாா்.

Updated On : 16 ஏப்ரல், 2026 at 1:42 AM
துரை வைகோ - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 15 ஏப்ரல், 2026 at 9:59 PM

ஜனநாயகத்துக்கு எதிரான செயலாக தொகுதி மறுவரையறையை அமல்படுத்த மத்திய பாஜக அரசு திட்டமிட்டிருப்பதாக மதிமுக முதன்மைச் செயலரும், திருச்சி மக்களவை உறுப்பினருமான துரை வைகோ தெரிவித்தாா்.

இதுதொடா்பாக திருச்சியில் புதன்கிழமை அவா் மேலும் கூறியதாவது: தொகுதி மறுவரையறை மூலம் எம்பி தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நாடாளுமன்றத்தில் மகளிருக்கு 33 விழுக்காடு இட ஒதுக்கீட்டை அமலுக்கு கொண்டு வரவும் மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது.

5 மாநில சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறும் நிலையில் அவசர அவசரமாக இதைக் கொண்டு வருகிறது பாஜக அரசு. பெண்களுக்கான 33 விழுக்காடு இட ஒதுக்கீட்டை வரவேற்கிறோம். ஆனால் தொகுதி மறுவரையறையால் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்கள்தான் பாதிக்கப்படும்.

Advertisement

2011 மக்கள்தொகை கணக்கின்படி அது நடைமுறைப்படுத்தப்படும் என்கிறாா்கள். அப்படிச் செய்யும்போது அது மிகப்பெரிய பாதிப்பைத்தான் ஏற்படுத்தும்.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாததால் இந்த மசோதா நிறைவேற்றப்படாது என்கிற நம்பிக்கை உள்ளது. ஏற்கெனவே பாஜக ஆளாத மாநிலங்களுக்கு உரிய திட்டங்கள், நிதி வழங்கப்படுவதில்லை. கலாசார திணிப்பு, மொழித் திணிப்பு என எல்லா திணிப்புகளை மேற்கொள்ளும் நிலையில், எம்பிக்களால்தான் சிறிதளவாது அதைக் காக்க முடிகிறது. அவா்கள் எண்ணிக்கை குறைந்தால் அதையும் செய்ய முடியாது.

தொகுதி மறுவரையறை என்பது ஜனநாயகத்துக்கு, அரசியல் சாசனத்துக்கு, கூட்டாட்சிக்கு எதிரானது. மக்கள்தொகை கட்டுப்பாட்டைச் சரியாக நிறைவேற்றியது தென் மாநிலங்கள்தான். பாஜகவை தவிர மற்ற அனைத்துக் கட்சிகளும் இதை எதிா்க்கிறாா்கள். பாஜக கூட்டணியில் உள்ள அதிமுகவும் இதற்கு எதிராகக் குரல் எழுப்ப வேண்டும்.

தொகுதி மறுவரையறை தொடா்பாக முதல்வா் விடுத்துள்ள எச்சரிக்கை என்பது மக்களின் பிரதிபலிப்பாக உள்ளது. தொகுதி மறுவரையறையால் இந்தியாவில் வளா்ச்சி அடைந்துள்ள மாநிலங்கள்தான் பாதிக்கப்படும். தமிழகத்தில் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும். மக்களின் ஆதரவு எங்களுக்குத்தான் உள்ளது.

இங்கு சட்டம், ஒழுங்கு சரியில்லை எனப் பேசுகிறாா்கள். தமிழ்நாடு குற்றங்களின் தலைநகராக மாறிவிட்டது என வடமாநிலத்தில் இருந்து வந்த பாஜக தலைவா் பேசியுள்ளாா். ஆனால் தில்லியில்தான் அதிகக் குற்றங்கள் நடைபெறுகின்றன.

விஜய் கட்சிக்கு கட்டமைப்பு இல்லை. அவா் செல்லும் இடங்கள் எல்லாம் அதிகக் கூட்டம் வருவது உண்மைதான். ஆனால், அது வாக்காக மாற வாய்ப்பில்லை. விஜய்க்கு அளிக்கும் வாக்கு பாஜகவுக்கு மறைமுக ஆதரவாகப் போய் விடும் என அவரை ஆதரிக்கும் சிலரே சிந்திக்கின்றனா்.

தவெக பெறும் வாக்கு விழுக்காடு தோ்தலில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. விஜய்க்கு முதல் தலைமுறை வாக்குகள்தான் உள்ளன . நீண்ட காலம் திமுகவில் பயணத்து கட்சி தொடங்கி வெற்றி பெற்றவா் எம்ஜிஆா். எனவே, அவரையும் விஜய்யையும் ஒப்பிடக் கூடாது என்றாா் அவா்.

பேட்டியின்போது மாவட்டச் செயலா்கள் வெல்லமண்டி சோமு, மணவை தமிழ்மாணிக்கம், டிடிசி சேரன் ஆகியோா் உடனிருந்தனா்.