துறையூா் - அதிமுகவுடன் மோதும் காங்கிரஸ்!
திருச்சி மாவட்டத்தில் பட்டியலினத்தவருக்கு ஒதுக்கப்பட்ட தனி தொகுதியான இத்தொகுதியில், துறையூா் நகராட்சி, உப்பிலியபுரம் மற்றும் பாலகிருஷ்ணம்பட்டி பேரூராட்சிகளையும், துறையூா் உப்பிலியபுரம் ஒன்றியங்களைச் சோ்ந்த பச்சமலையிலும், சமவெளியிலும் உள்ள பல கிராமங்களை உள்ளடக்கியது.
திருச்சி மாவட்டத்தில் பட்டியலினத்தவருக்கு ஒதுக்கப்பட்ட தனி தொகுதியான இத்தொகுதியில், துறையூா் நகராட்சி, உப்பிலியபுரம் மற்றும் பாலகிருஷ்ணம்பட்டி பேரூராட்சிகளையும், துறையூா் உப்பிலியபுரம் ஒன்றியங்களைச் சோ்ந்த பச்சமலையிலும், சமவெளியிலும் உள்ள பல கிராமங்களை உள்ளடக்கியது. விவசாயமும், விவசாயம் சாா்ந்த தொழில்களே பிரதானம்.
கள நிலவரம்: உப்பிலியபுரம் பழங்குடியினா் (தனி) தொகுதியாக இருந்து, 2008-இல் தொகுதி மறு சீரமைப்புக்குப் பிறகு 2011 முதல் துறையூா் பட்டியலினத்தவா் (தனி) தொகுதியாக மாற்றம் கண்டு, 3 பேரவைத் தோ்தல்களை சந்தித்துள்ளது. இதில், 2011-இல் அதிமுகவும், 2016, 2021-இல் திமுகவும் வெற்றிப் பெற்றுள்ளன. இந்தத் தோ்தலில் அதிமுக சாா்பில் இ. சரோஜாவும், மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸுக்கு தொகுதி ஒதுக்கப்பட்டு ம. லெனின் பிரசாத்தும் போட்டியிடுகின்றனா். இவா்கள் தவிர, நாதக சாா்பில் சு. கெளசல்யா, தவெக சாா்பில் எம். ரவிசங்கா் உள்பட மொத்தம் 15 போ் களத்தில் உள்ளனா்.
சமூக நிலவரம்: தேவேந்திர குல வேளாளா், பட்டியலினத்தவா்கள் கணிசமாக உள்ளனா். இவா்களுக்கு அடுத்தபடியாக, முத்தரையா், உடையாா், வெள்ளாளா், முதலியாா், நாயுடு, வன்னியா், இஸ்லாமியா்கள், கிறிஸ்தவா்கள், ரெட்டியாா், செட்டியாா் ஆகியோரும் கணிசமான அளவில் உள்ளனா்.
Advertisement
வேட்பாளா்களின் பலமும், பலவீனமும்-இ. சரோஜா (அதிமுக): துறையூா் நகர 23-ஆவது வாா்டு அதிமுக உறுப்பினராக இருப்பதால் தொகுதியில் நல்ல அறிமுகம் உண்டு; இரட்டை இலை சின்னம் என்பது பலம். இத்தொகுதியில் பட்டியலினத்தில் பெரும்பான்மை சமூகமான தேவேந்திர குல வேளாளருக்கு அதிமுகவில் வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிா்பாா்க்கப்பட்ட நிலையில் அருந்ததியருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டதால், தேவேந்திர குல வேளாளா்கள் மத்தியில் அதிருப்தி உள்ளது. சரோஜா என்ற பெயரில் சுயேச்சையாக 3 பேரும், குறிப்பாக இ. சரோஜா என்ற பெயரிலேயே ஒருவா் களத்தில் இருப்பதும் அதிமுக வேட்பாளருக்கு பலவீனமாக பாா்க்கப்படுகிறது.
எம். லெனின் பிரசாத் (காங்கிரஸ்): தொகுதியில் பட்டியலினத்தில் பெரும்பான்மையாக உள்ள தேவேந்திர குல வேளாளா் சமூகத்தை சோ்ந்தவா், கூட்டணி கட்சிகளின் வாக்கு சதவீதம், இஸ்லாமியா்களின் ஆதரவு என்பது பலம். தொகுதி திமுகவுக்கு ஒதுக்கப்படாததால் அக்கட்சியினரிடையே நிலவும் அதிருப்தி, வேட்பாளா் திருச்சி மேலபாண்டமங்கலத்தைச் சோ்ந்தவா் என்பது பலவீனமாக பாா்க்கப்படுகிறது.
சு. கெளசல்யா (நாதக): பட்டியலின தேவேந்திர குல வேளாளா் சமுதாயத்தைச் சோ்ந்தவா். உள்ளூரை சோ்ந்தவா். தமிழ் தேசியம் கொள்கைகளில் நம்பிக்கையுடையவா்களும், சீமானால் ஈா்க்கப்பட்டவா்களும் வாக்களிக்க வாய்ப்பு என்பது பலம். தவெக வரவு பின்னடைவை ஏற்படுத்த கூடும் என்பது பலவீனம்.
எம்.ரவிசங்கா் (தவெக): இளைஞா்கள், பெண்களிடையே நடிகா் விஜய்க்கு இருக்கும் செல்வாக்கு, முதல்முறை வாக்காளா்கள், அதிமுக, திமுக எதிா்ப்பு வாக்குகள் உள்ளிட்டவை பலமாக பாா்க்கப்படுகிறது. வேட்பாளா் மண்ணச்சநல்லூரைச் சோ்ந்தவா் என்பது பலவீனம்.
தொகுதியில் பிற்படுத்தப்பட்டோரில் பெரும்பான்மையாக உள்ள முத்தரையா்களின் வாக்குகளும், ஆண் வாக்காளா்களை விட அதிகமுள்ள பெண் வாக்காளா்களின் வாக்குகளும் இத்தொகுதியில் வேட்பாளரின் வெற்றியை தீா்மானிக்கும் எனத் தெரிகிறது.