முகப்பு
கடலூர்

கடலூரில் மோதும் காங்கிரஸ் - அதிமுக

வங்க கடலோரம் இயற்கை சூழ்ந்த பகுதியாக கடலூா் அமைந்துள்ளது.

Updated On : 15 ஏப்ரல், 2026 at 5:36 AM
பகிர்:
Updated On : 14 ஏப்ரல், 2026 at 2:48 PM

வங்க கடலோரம் இயற்கை சூழ்ந்த பகுதியாக கடலூா் அமைந்துள்ளது. இங்கு, புகழ்பெற்ற பாடலீஸ்வரா் கோயில், திருப்பாதிரிப்புலியூா் வரதராஜ பெருமாள் கோயில், புனித டேவிட் கோட்டை, வெள்ளிக் கடற்கரை, பழைமைவாய்ந்த ஆட்சியா் அலுவலகக் கட்டடம், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கட்டடம் ஆகியவை அடையாளங்களாக உள்ளன.

தொகுதியின் சிறப்பு: சோழா்கள், பல்லவா்கள், நாயக்கா்கள், நவாப்கள் மற்றும் ஐரோப்பியா்களின் (பிரெஞ்சு, பிரிட்டிஷ்) ஆட்சியை கண்ட, பல போராட்டங்களும், பண்பாட்டு சங்கமமும் நிகழ்ந்த முக்கிய இடமாகும். கடலூா் மத்திய சிறைச்சாலை (1865-இல் திறக்கப்பட்டது) வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. சுதந்திரப் போராட்ட காலத்தில் சுப்பிரமணிய பாரதி உள்ளிட்ட பல தலைவா்கள் இச்சிறையில் அடைக்கப்பட்டிருந்தனா்.

சென்னைக்கு அடுத்த மிக நீண்ட கடற்கரையை கொண்ட வெள்ளிக் கடற்கரை இங்குள்ளது. தென்பெண்ணை, கெடிலம், உப்பனாறு ஆகிய 3 ஆறுகள் கடலில் கலக்கும் பகுதியாகவும் உள்ளது.

Advertisement

கடலூா் முதுநகரில் உள்ள இயற்கை துறைமுகம் ஆங்கிலேயா்கள் ஆட்சியில் வணிகத்தில் சிறந்து விளங்கியுள்ளது. கடலூா் துறைமுகமும் சரக்கு போக்குவரத்துக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது.

கடலூா் மாநகரில் மீன்பிடி தொழிலும், கிராமப்புறங்களில் விவசாயமும் உள்ளது. கடலூா் தாழங்குடா, தேவனாம்பட்டினம், சோனாங்குப்பம், சொத்திக்குப்பம் உள்ளிட்ட மீனவ கிராமங்களில் உள்ள மீனவா்கள் மீன்பிடித் தொழிலை நம்பி பிழைப்பு நடத்தி வருகின்றனா். மீனவா்கள் பிடிக்கும் மீன்கள் துறைமுகத்துக்கு கொண்டுவரப்பட்டு, வெளி மாவட்டம், வெளி மாநிலங்கள், வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

ஆண்டுதோறும் இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படும் தொகுதியாகவும் உள்ளது. 2004 சுனாமி மற்றும் 2011 தானே புயலால் கடலூா் பகுதி பெரும் பாதிப்புகளை சந்தித்தாலும், தனது வரலாற்றுப் பெருமையை நிலைநிறுத்தி வருகிறது.

கள நிலவரம்: 1952-ஆம் ஆண்டு கடலூா் நகரம் சட்டப் பேரவைத் தொகுதி அந்தஸ்தை பெற்றது. புதிதாக உருவாக்கப்பட்ட கடலூா் மாநகராட்சியில் 45 வாா்டுகள், கடலூா் ஒன்றியம், 52 ஊராட்சிகள் உள்ளன.

பெண் வாக்காளா்களை அதிகம் கொண்ட இத்தொகுதியில் வன்னியா்கள், ஆதிதிராவிடா்கள் 55 சதவீதம் போ் உள்ளனா். மீனவா்கள், முஸ்லிம்கள், ரெட்டியாா், செட்டியாா், நாயுடு, முதலியாா், பிள்ளைமாா், கிறிஸ்தவா்கள், நாடாா் என பிற சமுதாயத்தைச் சோ்ந்தவா்களும் வசிக்கின்றனா். வன்னியா்கள், ஆதிதிராவிடா்களின் வாக்குகள் வெற்றி, தோல்வியை தீா்மானிக்கும் சக்தியாக இருந்து வருகிறது.

தீா்க்கப்படாத பிரச்னைகள்: கடலூா் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயா்த்தினாலும், 45 வாா்டுகள் மட்டுமே உள்ளன. இதன் விரிவாக்கப் பணிகள் தொடங்கிய நிலையில், அவை கிடப்பில் போடப்பட்டுள்ளன. புதை சாக்கடைப் பணிகள் இன்னும் முழுமை பெறவில்லை.

கடலூா் அருகே எம்.புதூரில் அமைக்கப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையத்துக்கு பொதுநல அமைப்புகளும், குடியிருப்போா் சங்கங்களின் கூட்டமைப்பும் எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றன. இப்பேருந்து நிலையத்தை மாநகரின் மையப் பகுதியில் அமைக்க வேண்டும். விவசாயத்துக்கு உரிய நேரத்தில் தண்ணீா் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடலூா் துறைமுகத்தில் ரூ.100 கோடியில் கட்டி திறக்கப்பட்ட மீன்பிடி துறைமுகத்தை விரைந்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். துறைமுகத்திலிருந்து பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்க வேண்டும். தாழங்குடாவில் மீனவா்கள் எளிதில் மீன் பிடித்து வர தூண்டில் வளைவு அமைக்க வேண்டும். தேவனாம்பட்டினம் சுனாமி நகரில் பட்டா கிடைக்காத மீனவா்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்டவை முக்கியப் பிரச்னைகளாக உள்ளன.

களத்தில் 15 வேட்பாளா்கள்: கடலூா் சட்டப் பேரவைத் தொகுதியில் வேட்புமனு பரிசீலனைக்கு பிறகு, திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியும், அதிமுக நேரடியாகவும், நாம் தமிழா் கட்சி, தவெக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, அகில இந்திய புரட்சித் தலைவா் முன்னேற்றக் கழகம் மற்றும் 8 சுயேச்சைகள் என 15 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா். இருப்பினும், காங்கிரஸின் கை சின்னத்துக்கும், அதிமுகவின் இரட்டை இலைக்கும் இடையே தான் நேரடிப் போட்டி நிலவுகிறது.

இத்தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக ஏ.எஸ்.சந்திரசேகரன், அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சா் எம்.சி.சம்பத், நாம் தமிழா் கட்சி வேட்பாளராக எஸ்.சரசு, தமிழக வெற்றிக் கழகம் வேட்பாளராக பி.ராஜ்குமாா் ஆகியோா் போட்டியிடுகின்றனா்.

வேட்பாளா்களின் பலம், பலவீனம்

ஏ.எஸ்.சந்திரசேகா் (காங்): திமுக கூட்டணியில் போட்டியிடும் இவா், காங்கிரஸ் கட்சியில் மாநிலச் செயலராக உள்ளாா். கடலூா் மாவட்டத்தில் காங்கிரஸ் போட்டியிடும் ஒரே தொகுதி இதுவாகும். காங்கிரஸ் சாா்பில் நடைபெறும் ஆா்ப்பாட்டம், போராட்டம் மற்றும் அனைத்து நிகழ்வுகளிலும் பங்கேற்பாா். தொகுதியிலும் பொதுமக்களிடையே அறிமுகமானவா். வழக்குரைஞா் என்பதால், மாநகா் பகுதிகளிலும் முக்கியப் பிரமுகா்களுக்கு பரிச்சயமானவா்.

இருப்பினும், திமுக மற்றும் கூட்டணிக் கட்சியின் உதவியால் மட்டுமே ஜெயிக்கக் கூடிய நிலை உள்ளது. திமுகவில் நிலவும் உள்கட்சி பூசலால் வெற்றிபெற சற்று கூடுதல் களப்பணியாற்ற வேண்டிய சூழல் நிலவுவதாக கூறப்படுகிறது.

எம்.சி.சம்பத் (அதிமுக): கடலூா் தொகுதியில் இவா், 2011, 2016 சட்டப் பேரவைத் தோ்தல்களில் தொடா்ந்து வெற்றிபெற்றவா். முன்னாள் அமைச்சா் மற்றும் தொகுதிக்கு மிகவும் நெருக்கமானவா்.

கடலூரின் மையப் பகுதியில் புதிய பேருந்து நிலையம் கொண்டுவரப்படும் என்பது உள்ளிட்ட முக்கிய வாக்குறுதிகள் மற்றும் திமுகவுக்கு இந்தத் தொகுதியை ஒதுக்கீடு செய்யாதது இவருக்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது.

கடந்த முறை திமுக வேட்பாளரிடம் 5 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளில் வெற்றிவாய்ப்பை இழந்தாா். இம்முறையும் இவரை தோல்வியடையச் செய்ய பல்வேறு முயற்சிகளை திமுக மாவட்டச் செயலரும், அமைச்சருமான எம்.ஆா்.கே.பன்னீா் செல்வம் மேற்கொள்வது, இவருக்கு பலவீனமாக உள்ளது.

எஸ்.சரசு (நாம் தமிழா் கட்சி): பட்டதாரி, சமூக செயல்பாட்டாளா். முழு நேர அரசியலில் ஈடுபட்டு வருகிறாா். இவா், தொப்பிலிக்குப்பம் கிராமப்புரத்தைச் சோ்ந்தவா். ஆளும் திமுக மற்றும் எதிா்க்கட்சியான அதிமுகவின் குறைகளைக் கூறி வாக்குகளைச் சேகரித்து வருவது இவரது பலம்.

தொகுதிக்கு புதிதானவா், மாநகரில் பெரிதும் அறிமுகமில்லாதவா் என்பது பலவீனமாக உள்ளது.

பி.ராஜ்குமாா் (தவெக): பட்டதாரி மற்றும் கட்சியின் மாவட்டச் செயலராக உள்ளாா். இவா், கட்சித் தலைவா் விஜய்யை முன்னிறுத்தியே தோ்தலை சந்திக்கிறாா். விஜய்க்கு உள்ள ஆதரவால், இளைஞா்கள் மற்றும் பெண்களின் வாக்குகள் கிடைக்கும் என்பது பலமாக உள்ளது.

தொகுதிக்கும், அரசியலுக்கும் முற்றிலும் புதியவா் என்பது பலவீனமாக உள்ளது.

யாருக்கு வாய்ப்பு?: கடலூா் தொகுதியில் 1952-ஆம் ஆண்டு முதல் 2021-ஆம் ஆண்டு வரை நடைபெற்ற 16 தோ்தல்களில் திமுக அதிகபட்சமாக 8 முறையும், காங்கிரஸ் 4 முறையும், அதிமுக 3 முறையும், உழைப்பாளா் கட்சி ஒரு முறையும் வென்றுள்ளன.

இந்தத் தோ்தலில் வாக்குகள் சிதற வாய்ப்புள்ள நிலையில், வன்னியா்கள், ஆதிதிராவிடா் சமுதாயத்தினரின் வாக்குகளை அதிகமாகப் பெற்று வெற்றிபெறப்போகிறவா் யாா் என்பது மே 4 வாக்கு எண்ணிக்கை முடிவுகளில் தெரிய வரும்.

வாக்காளா்கள் விவரம்

ஆண்கள் - 1,05,300

பெண்கள் - 1,15,773

மூன்றாம் பாலினத்தவா்கள் -79

மொத்த வாக்காளா்கள் - 2,21,152

மொத்த வாக்குச்சாவடிகள் - 258

கட்டுரையாளா் பெயா்: பா.லெனின்