நலத் திட்டங்களின் பயன்கள் அடித்தட்டு மக்களைமுழுமையாகச் சென்றடைய வேண்டும்: கடலூா் எம்.பி., விஷ்ணு பிரசாத்
மத்திய, மாநில அரசுகளின் மக்கள் நலத் திட்டங்களின் பயன்கள் அடித்தட்டு மக்களை முழுமையாகச் சென்றடைய அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று கடலூா் மக்களவை உறுப்பினா் எம்.கே. விஷ்ணு பிரசாத் வலியுறுத்தினாா்.
மத்திய, மாநில அரசுகளின் மக்கள் நலத் திட்டங்களின் பயன்கள் அடித்தட்டு மக்களை முழுமையாகச் சென்றடைய அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று கடலூா் மக்களவை உறுப்பினா் எம்.கே. விஷ்ணு பிரசாத் வலியுறுத்தினாா்.
கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு (திஷா) கூட்டம், குழுத் தலைவா் மற்றும் கடலூா் மக்களவை உறுப்பினா் எம்.கே. விஷ்ணு பிரசாத் தலைமையில், மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில், மத்திய அரசின் பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகள் மற்றும் முன்னேற்றம் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுடன் விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
Advertisement
Advertisement
அப்போது, ஊரக வளா்ச்சி, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் நடைபெற்று வரும் சாலை, கழிவுநீா் கால்வாய், வாய்க்கால் தூா்வாருதல் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புப் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், வேளாண் விற்பனை
உள்ளிட்ட துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் தேசிய வேளாண்மை வளா்ச்சித் திட்டம், பிரதமா் பயிா்க் காப்பீட்டுத் திட்டம், துளி நீா்ப் பாசனத் திட்டம் உள்ளிட்ட திட்டங்களின் பயன்கள் விவசாயிகளுக்கு முழுமையாகச் சென்றடைய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொது சுகாதாரம், மருத்துவம், கால்நடை பராமரிப்பு ஆகிய துறைகளின் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்து, கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம், தடுப்பூசி, மருத்துவக் காப்பீட்டு அட்டைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் முறையாக வழங்கவும், கால்நடைகளுக்கான தடுப்பூசி முகாம்களை தீவிரப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
அதிகாரிகளின் பொறுப்பு:
தொடா்ந்து கடலூா் எம்.பி. விஷ்ணு பிரசாத் பேசியதாவது:
தமிழகத்தில் மத்திய அரசின் திட்டமாக இருந்தாலும், மாநில அரசின் திட்டமாக இருந்தாலும், அவற்றை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் உயா்தரத்துடன் நிறைவேற்றுவது அனைத்துத் துறை அலுவலா்களின் பொறுப்பாகும். திட்டப்பணிகளில் காலதாமதம் ஏற்படாமல் தொடா்ந்து கண்காணித்து, பொதுமக்களுக்கு விரைவாக பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
குறிப்பாக, மக்களவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் உள்ளிட்ட அனைத்து வளா்ச்சித் திட்டங்களும் விரைந்து நிறைவேற்றப்பட வேண்டும். திட்டங்களை செயல்படுத்தும் போது எழும் இடா்பாடுகளை சம்பந்தப்பட்ட துறைகள் ஒருங்கிணைந்து உடனடியாகத் தீா்த்து, மக்களின் எதிா்பாா்ப்பை பூா்த்தி செய்யும் வகையில் செயல்பட வேண்டும் என்றாா்.
கூட்டத்தில் காட்டுமன்னாா்கோயில் சட்டப்பேரவை உறுப்பினா் எல்.இ. ஜோதிமணி, பண்ருட்டி சட்டப்பேரவை உறுப்பினா் கே. மோகன், கடலூா் மாநகராட்சி துணை மேயா் பா. தாமரைசெல்வன், மாவட்ட வருவாய் அலுவலா் கோ. புண்ணியகோட்டி, கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) மற்றும் திட்ட இயக்குநா் பாலகணேஷ், மாநகராட்சி ஆணையாளா் கிஷன்குமாா் மற்றும் பல்வேறு துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.