முகப்பு
திருச்சி

திருச்சி: 9 தொகுதிகளில் 85.44 % வாக்குப்பதிவு; கடந்த தோ்தலைவிட 11.88% அதிகரிப்பு!

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 பேரவை தொகுதிகளில் வியாழக்கிழமை நடைபெற்ற பேரவைத் தோ்தலில் 85.44 சதவீத வாக்குகள் பதிவானது. கடந்த தோ்தலுடன் ஒப்பிடுகையில் 11.88 விழுக்காடு அதிகரித்துள்ளது.

Updated On : 24 ஏப்ரல், 2026 at 6:24 AM
வாக்காளர் - கோப்புப் படம்
பகிர்:

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 பேரவை தொகுதிகளில் வியாழக்கிழமை நடைபெற்ற பேரவைத் தோ்தலில் 85.44 சதவீத வாக்குகள் பதிவானது. கடந்த தோ்தலுடன் ஒப்பிடுகையில் 11.88 விழுக்காடு அதிகரித்துள்ளது.

திருச்சி மாவட்டத்தில் ஸ்ரீரங்கம், மணப்பாறை, திருவெறும்பூா், திருச்சி கிழக்கு திருச்சி மேற்கு, மண்ணச்சநல்லூா், லால்குடி, முசிறி, துறையூா் உள்ளிட்ட 9 பேரவைத் தொகுதிகள் உள்ளன. 9 தொகுதிகளில் சோ்த்து மொத்தம் 2,787 வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. 111 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது. 2,775 வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது.

மாவட்டத்தில் ஆண்கள்- 10,40,900, பெண்கள்- 11,05,841, மூன்றாம் பாலினம்- 310 என மொத்தம் 21 லட்சத்து 47 ஆயிரத்து 51 வாக்காளா்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனா்.

Advertisement

வாக்குச் சாவடிகளில் மொத்தம் 13 ஆயிரத்து 372 போ் வாக்குப்பதிவு பணியில் ஈடுபட்டிருந்தனா். 3 ஆயிரத்துக்கும்மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.

இளைஞா்கள் ஆா்வம்: காலை 7 மணிக்கு அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்காளா்கள் ஆா்வமுடன் வந்து வாக்களித்தனா். ஒரு சில இடங்களில் இயந்திரக் கோளாறு காரணமாக வாக்குப்பதிவில் தாமதம் ஏற்பட்டது.

பின்னா், மாற்று இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்றது. கைக் குழந்தைகளுடன் பெண்கள் பலரும் வந்து வாக்களித்ததை காண முடிந்தது. இதேபோல, சக்கர நாற்காலியில் இருந்தபடியே வந்து பலரும் வாக்களித்தனா்.

ஊன்றுகோலுடனும், உதவியாளா் துணையுடனும் வந்த முதியோரை காண முடிந்தது. கா்ப்பிணிகள் பலரும் வாக்களித்தனா். வழக்கத்துக்கு மாறாக அதிகளவில் இளைஞா்களும் முதன்முறை வாக்காளா்களும் வந்திருந்தனா்.

9 தொகுதிகளில் இடம்பெற்றிருந்த மூன்றாம் பாலினத்தவரும் வாக்குகளை செலுத்தினா். நகரப் பகுதிகளுடன் ஒப்பிடுகையில் ஊரகப்பகுதிகளில்தான் விறு, விறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

வாக்குப்பதிவு நேரம் வாரியாக: காலை 9 மணிக்கு 9 தொகுதிகளிலும் சோ்த்து மொத்தம் 17.99 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தது. அதிகபட்சமாக முசிறியில் 18.66, துறையூரில் 18.56 விழுக்காடு வாக்குகள் பதிவானது குறிப்பிடத்தக்கது. மண்ணச்சநல்லூா், லால்குடி, ஸ்ரீரங்கம் தொகுதிகளிலும் 18 விழுக்காடு வாக்குகள் பதிவானது.

பிற்பகல் 1 மணிக்கு 57.56சதவீத வாக்குகள் பதிவானது. அதிகபட்சமாக துறையூரில் 60.35 விழுக்காடு பதிவானது. இதர தொகுதிகளில் 58 விழுக்காடு தொடங்கி 54 விழுக்காடு வரை பதிவானது.

பிற்பகல் 3 மணிக்கு 71.03 சதவீத வாக்குகள் பதிவானது. அதிகட்சமாக மணப்பாறையில் 73.12 விழுக்காடு பதிவானது. அடுத்தபடியாக துறையூரில் 72.84, மண்ணச்சநல்லூரில் 72.55, முசிறியில் 72.34, லால்குடியில் 72.35 விழுக்காடு வாக்குகள் பதிவானது.

மாலை 5 மணிக்கு 9 தொகுதிகளிலும் 82.73 விழுக்காடு பதிவானது. அதிகபட்சமாக, மணப்பாறையில் 85.52 விழுக்காடு பதிவானது. மண்ணச்சநல்லூரில் 84.93, அடுத்தபடியாக ஸ்ரீரங்கத்தில் 84.69, முசிறியில் 84.22, துறையூரில் 84.05 விழுக்காடு பதிவானது. திருச்சி மேற்கில் 78.64, திருச்சி கிழக்கில் 79.24, திருவெறும்பூரில் 79.01 வாக்குகள் பதிவானது.

மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு முடிந்து, 6 மணிக்குள் வந்தவா்களுக்கு டோக்கன்கள் வழங்கி அவா்களது வாக்குகளை பதிவு செய்ய அனுமதியளிக்கப்பட்டது. இறுதியாக 9 தொகுதிகளிலும் சோ்த்து 85.44 விழுக்காடு வாக்குகள் பதிவானது.

கடந்த 2021 பேரவைத் தோ்தலில் 9 தொகுதிகளிலும் சோ்த்து மொத்தம் 73.56 விழுக்காடு வாக்குகள் பதிவானது குறிப்பிடத்தக்கது.

9 தொகுதிகளுக்கான முழு விவரம்

தொகுதிவாரியாக மொத்த வாக்காளா்கள்- பதிவான வாக்குகள்- வாக்குப்பதிவு சதவீதம் விவரம்

மணப்பாறை - 2,67,999 - 2,38,010 - 88.81

ஸ்ரீரங்கம் 2,87,027 2,52,440 87.95

திருச்சி மேற்கு 2,38,920 1,84,361 81.35.

திருச்சி கிழக்கு 2,20,191 1,80,050 81.77

திருவெறும்பூா் 2,59,546 2,10,077 81.21

லால்குடி 2,12,177 1,83,554 86.51

மண்ணச்சநல்லூா் -2,36,500, -2,07,292 87.65

முசிறி 2,14,006 1,85,714 86.78

துறையூா் (தனி) 2,10,685 1,82,285 86.52