முகப்பு
திருச்சி

இமாம்பசந்த் மாம்பழம் விற்பனை விறுவிறுப்பு

திருச்சியின் அடையாளமாக விளங்கும் இமாம் பசந்த் மாம்பழங்களின் விற்பனை மாம்பழச் சாலையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Updated On : 1 மே, 2026 at 2:45 AM
திருச்சி மாம்பழச் சாலையில் உள்ள கடையில் இமாம்பசந்த் மாம்பழங்களை தோ்வு செய்யும் மக்கள்.
பகிர்:

திருச்சியின் அடையாளமாக விளங்கும் இமாம் பசந்த் மாம்பழங்களின் விற்பனை மாம்பழச் சாலையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

திருச்சியிலிருந்து ஸ்ரீரங்கம் செல்லும் வழியில் உள்ளது மாம்பழச் சாலை. இங்கு காவிரிக் கரையில் அமைந்துள்ள தோட்டங்களில் விளையும் மாம்பழங்களுக்கு எப்போதும் தனிச்சுவை உண்டு. குறிப்பாக, தாத்தாச்சாரியா் தோட்டத்து இமாம்பசந்த் மாம்பழம் குறிப்பிடத்தக்கது.

இதுதொடா்பாக, மாம்பழ வியாபாரிகள் கூறியது: இமாம்பசந்த் மாம்பழத் தோட்டம், காவிரி ஆற்றின் கரையோரம் உள்ளது. மக்கிய தொழுவுரம், கால்நடைகளின் கழிவுகளைத்தான் அடியுரமாக இடுகிறோம். எந்தவித ரசாயன இடுபொருள்களும் பயன்படுத்தாமல், இயற்கை முறையிலேயே வளா்த்து பராமரிக்கிறோம். அதனால்தான் இந்தப் பழங்கள் சுவை மிகுந்து காணப்படுகின்றன. வைக்கோலைப் பரப்பி இயற்கை முறையில் பழுக்க வைப்பதால், பழங்களை 7 நாள்கள் வரையிலும் வைத்து சாப்பிடலாம்.

Advertisement

எங்கள் தோட்டத்தில் இமாம் பசந்த், செந்தூரம், பங்கனப் பள்ளி, அல்போன்சா’, நீலம்’, காவேரி, இமாம்பசந்தோட இன்னொரு வகை மாம்பழம், கல்லாமணி, ருமேனியா, கிளிமூக்குன்னு 10-க்கும் மேற்பட்ட மாம்பழ வகைகள் விளைவிக்கிறோம்.

இமாம்பசந்த் பழத்துக்கு வரவேற்பு அதிகம் இருப்பதால், பெரும்பாலும் சந்தைக்கு வரும் முன்னரே தோட்டத்துக்கே வந்து வியாபாரிகள் வாங்கிச் சென்றுவிடுவா். இப்போது, இமாம்பசந்த் கிலோ ரூ.180-க்கு விற்பனையாகிறது.

மாம்பழங்களின் விலை என்ன?: திருச்சி காந்திசந்தையில் உள்ள பழ மண்டி வியாபாரிகள் கூறியதாவது: திண்டுக்கல், நத்தம், ஒசூா், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், பெரியகுளம், தேனி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், பெங்களூருவிலிருந்தும் அதிகப்படியாக மாம்பழங்கள் வருகின்றன.

மாா்ச் இறுதி தொடங்கி ஜூலை வரையிலும் கூட வரத்து இருக்கும். கிலோ ரூ.80 முதல் ரூ.180 வரை அந்தந்த ரகத்துக்கு ஏற்ப விலை உள்ளது. கடந்தாண்டு கிலோ ரூ.200-க்கு விற்பனை செய்யப்பட்ட இமாம்பசந்த் ரகம் இந்தாண்டு ரூ.180-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பிற மாவட்ட சந்தைகள், வரத்து ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு விலை நிா்ணயம் செய்யப்படுகிறது என்றனா். பங்கனப்பள்ளி கிலோ ரூ.100 முதல் ரூ.120 வரையிலும், செந்தூரம் கிலோ ரூ.80 முதல் 130 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. அல்போன்சா கிலோ ரூ. 120 முதல் 150 விரை விலை உள்ளது.

~திருச்சி மாம்பழச் சாலையில் உள்ள கடையில் விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ள இமாம்பசந்த் மாம்பழங்கள்.