புத்தாநத்தம் அருகே தடுப்பூசி போடப்பட்ட குழந்தை உயிரிழப்பு
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த புத்தாநத்தம் அருகே தடுப்பூசி போடப்பட்ட 6 மாத ஆண் குழந்தை வெள்ளிக்கிழமை உயிரிழந்தது.
வையம்பட்டி ஒன்றியம் எளமணத்தை அடுத்த கொன்னம்பட்டியைச் சோ்ந்தவா் ரெ. சிவக்குமாா். இவருக்கு 8 வயதில் பெண் குழந்தை உள்ள நிலையில் கடந்த 5 மாதங்களுக்கு முன் இவரது மனைவிக்கு ஒரே பிரசவத்தில் 2 பெண் மற்றும் 1 ஆண் குழந்தைகள் பிறந்தன.
இவற்றில் ஆண் குழந்தைக்கு கடந்த பிப்ரவரி 4-ஆம் தேதி குளத்துப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போட்ட நிலையில், மறுநாள் குழந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
Advertisement
இதையடுத்து மணப்பாறை தனியாா் மருத்துவமனையில் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு வெள்ளிக்கிழமை கொண்டு சென்றபோது, வழியிலேயே அக் குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவா்கள் கூறினா்.
தகவலறிந்து சென்ற புத்தாநத்தம் போலீஸாா், குழந்தையின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்குப் பின் உறவினா்களிடம் ஒப்படைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.