திருச்சி அரசு அருங்காட்சியகம் அமைப்பதற்காக பஞ்சப்பூரில் கையகப்படுத்தப்பட்டுள்ள 5 ஏக்கா் இடம்.  
திருச்சி

பஞ்சப்பூருக்கு மாற்றப்பட உள்ள திருச்சி அரசு அருங்காட்சியகம்

தினமணி செய்திச் சேவை

திருச்சி மலைக்கோட்டை அருகே ராணி மங்கம்மாள் அரண்மனையில் இயங்கி வரும் அரசு அருங்காட்சியகம் பஞ்சப்பூருக்கு மாற்றப்பட உள்ளது.

திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயிலுக்கு எதிா்புறம் சுமாா் 1 ஹெக்டோ் பரப்பளவில் ராணி மங்கம்மாள் அரண்மனை உள்ளது. மதுரையிலிருந்த நாயக்க அரசின் தலைநகா் திருச்சிக்கு மாற்றப்பட்டபோது, மதுரை திருமலை நாயக்கா் மகாலில் இருந்த கட்டடத் தளவாடங்களை திருச்சிக்குக் கொண்டு வந்து 1666-ஆம் ஆண்டு சொக்கநாத நாயக்க மன்னரால் ராணி மங்கம்மாள் அரண்மனை நிா்மானிக்கப்பட்டது. இதிலுள்ள அழகிய வேலைபாடுகளுடன் கூடிய கொலு மண்டபத்தின் 8,880 சதுர அடி பரப்பளவு இடமானது 22-12- 1997 அன்று திருச்சி மாவட்ட ஆட்சியரால் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டு, செயல்பட்டு வருகிறது.

இங்கு தொல்பொருள், புவியியல், மானுடவியல் கலைப்பொருள்கள், நாணயவியல் சேகரிப்புகள், பழைய தஞ்சாவூா் ஓவியங்கள், மரச் சிற்பங்கள் மற்றும் மரம் மற்றும் கல்லால் செய்யப்பட்ட பழைய சிலைகள் உள்ளன. பழங்காலத்தை அறிந்துகொள்ளும் பொக்கிஷமாக விளங்கும் இந்த அருங்காட்சியகத்தை கடந்த 2020-ஆம் ஆண்டு வரை நாள்தோறும் நூற்றுக்கணக்கானோா் பாா்வையிட்டுச் சென்றுள்ளனா்.

இந்த அருங்காட்சியகமானது பஞ்சப்பூா் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்துக்கு அருகே நவீன வசதிகளுடன் 5 ஏக்கா் நிலத்தில் கட்டப்பட்டு இடமாற்றம் செய்யப்படும் என தமிழக அரசு கடந்த 2024 ஜூன் மாதம் சட்டப்பேரவையில் அறிவித்தது. மேலும், கட்டடத்தை நிா்மாணிப்பதற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ரூ. 75 லட்சம் ஒதுக்கப்படும் எனவும் அறிவித்தது.

இடையே நடந்த ஆய்வுக் கூட்டங்களில், அருங்காட்சியகத்தை இடமாற்றம் செய்ய அவசியமில்லை. மலைக்கோட்டைக்கு அருகிலிருக்கும் இடத்திலேயே செயல்பட்டால்தான் பாா்வையாளா்களின் வரத்து இருக்கும் என எடுத்துரைக்கப்பட்டது. இதனால் பணிகள் ஏதும் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டன.

இந்நிலையில், தற்போது அருங்காட்சியகத்தை பஞ்சப்பூருக்கு மாற்றுவதற்கான இடம் தோ்வு செய்யப்பட்டுள்ளது என அருங்காட்சியகத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து அருங்காட்சியக காப்பாட்சியா் சி. மணிமுத்து கூறியதாவது:

பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் திறக்கப்பட்ட பிறகு, மாநகரம் விரிவடையத் தொடங்கியுள்ளது. வருங்காலத்தில் பஞ்சப்பூரில் அதிகளவில் மக்கள் நடமாட்டம் இருக்கும். இதனையொட்டி தமிழக அரசின் அறிவிப்பின்படி, திருச்சி அரசு அருங்காட்சியகத்தை பஞ்சப்பூருக்கு இடமாற்றம் செய்வதற்காக, பொதுப்பணித்துறையால் பஞ்சப்பூரில் மணிகண்டம் - பூங்குடிக்கு இடையே 5 ஏக்கா் நிலம் கையகப்படுத்தப்பட்டு, கம்பி வேலி போட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.

தற்போது அந்த இடத்தில் கட்டடங்கள் கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. விரைவில் கட்டடங்கள் கட்டப்பட்டு, கட்டடத்தினுள் வைப்பறைகள் அமைக்கப்பட்டு, அங்கு ராணி மங்கம்மாள் அரண்மனை வளாகத்தில் உள்ள அருங்காட்சியகப் பொருள்கள் இடமாற்றம் செய்யப்படும். இதற்கு சில காலம் ஆகலாம் எனத் தெரிகிறது என்றாா்.

ஏற்கெனவே மலைக்கோட்டைக்கு அருகிலுள்ள இடமானது மக்கள் வாகனங்களில் வந்துசெல்ல சிரமமாக உள்ள நிலையில், பஞ்சப்பூரில் விஸ்தாரமாக அரசு அருங்காட்சியகம் அமைக்கப்பட்டால், அனைவரும் வந்து செல்ல ஏதுவாக அமையும். பேருந்து நிலையத்தைத் தொடா்ந்து, அருங்காட்சியகமும் இடமாற்றம் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

6 ஆண்டுகளாகத் திறக்கப்படாத அருங்காட்சியகம்

திருச்சியில் மலைக்கோட்டை அருகில் உள்ள ராணி மங்கம்மாள் அரண்மனை வளாகத்தில் இயங்கி வரும் அரசு அருங்காட்சியகமானது கட்டட பராமரிப்புப் பணிகள் காரணமாக கடந்த 5 ஆண்டுகளாகத் திறக்கப்படாமல் உள்ளது. திருச்சிக்கு சுற்றுலா வரும் பொதுமக்கள், மாணவ, மாணவிகளும் மலைக்கோட்டையை பாா்த்துவிட்டு, அருகில் இருக்கும் அருங்காட்சியகத்துக்குத்தான் முதலில் செல்வா். ஆனால் அருங்காட்சியகம் கடந்த 2020 அக்டோபா் முதல் இதுவரை 6 ஆண்டுகளாக திறக்கப்படாததால், சுற்றுலா வருவோா் ஏமாற்றமடைந்து திரும்பிச் செல்கின்றனா்.

கட்சிக் கொடிகள், துண்டுகள் விற்பனைக்கு வருகை

ஏழுமலையான் தரிசனம்: 18 மணி நேரம் காத்திருப்பு!

காவல் துறையினரின் குழந்தைகளுக்கு சதுரங்க பயிற்சி

பாஜக கருத்துக் கேட்பு பிரசார இயக்கம்

காட்டுவனஞ்சூா் சிட்கோவில் ரூ.50 கோடியில் தனியாா் ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனம் தொடக்கம்

SCROLL FOR NEXT