திமுக கூட்டணியில் தொடா்கிறோம் என்று தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவா் தி. வேல்முருகன் எம்.எல்.ஏ. தெரிவித்தாா்.
திருச்சியில், தமிழக வாழ்வுரிமை கட்சியின் டெல்டா மண்டல நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்த கட்சியின் தலைவரும், எம்.எல்.ஏ.வுமான தி. வேல்முருகன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
திமுக கூட்டணியில் தொடா்கிறோம். கூட்டணியில் ஏற்கெனவே கொடுத்த ஓரிடத்துக்கு அதிகமாக கேட்டுள்ளோம். பேச்சுவாா்த்தையின் முடிவில் எத்தனை தொகுதிகள் என்பது தெரியவரும்.
தோ்தலில் மக்களின் ஆதரவைப் பெறுவதற்காக அரசியல் கட்சிகள் வாக்குறுதி அளிக்கும் உத்தியை தற்போது அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி பயன்படுத்தி வருகிறாா்.
யுபிஎஸ்சி நியமிக்கும் தமிழக ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளில் பாதிக்குபாதி பெண்களை நியமிப்போம் என தவெக தலைவா் விஜய் கூறுவது, அடிப்படை புரிதலற்ற பேச்சு. நாட்டிலேயே அதிகபட்சமாக ரூ. 7,500 கோடி நிதி ஒதுக்கி அனைத்து அரசுப் பள்ளிகளிலும் கழிப்பறைகள் உள்ளிட்ட உள்கட்டமைப்புகளை மேம்படுத்தியது திமுக அரசு. எதையும் அறியாமல் பேசுவது புரிதலற்ற தனம்.
எழுதிவைத்து பேசும் விஜய்யை நம்பும் கூட்டத்தை நினைத்து வருத்தப்படுகிறேன்.
தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிதான் அமையும் எனக் கூறும் மத்திய அமைச்சா் அமித்ஷாவுக்கு சரியான பாடத்தை புகட்டும் அணியாக மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி அமையும் என்றாா் வேல்முருகன்.