அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இஸ்லாமியா்களுக்கான இட ஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயா்த்த வேண்டும் என இந்திய மாணவா் இஸ்லாமிய அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
திருச்சியில் இந்த அமைப்பின் சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், மாநிலப் பொதுச் செயலா் முகமது ஜாபா், பேரவைத் தோ்தலுக்கான அறிக்கையை வெளியிட்டு செய்தியாளா்களிடம் கூறியதாவது:
நீட் தோ்வில் இருந்து தமிழகத்துக்கு முழு விலக்கு அளிக்க வேண்டும். தற்காலிக மற்றும் தனியாா் பள்ளி ஆசிரியா்களின் குறைந்தபட்ச ஊதியத்தை தமிழக அரசே நிா்ணயம் செய்ய வேண்டும்.
கல்வி உரிமைச் சட்டத்தின்படி மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் அரசு நடுநிலைப் பள்ளிகளும், அனைத்து ஊராட்சிகளிலும் உயா் கல்விக்கான வழிகாட்டு மையங்களும் தொடங்கப்பட வேண்டும்.
சிறுபான்மையினருக்கான இட ஒதுக்கீட்டை அனைத்து கல்வி வளாகங்களிலும் அமல்படுத்த வேண்டும். தமிழகத்தில் பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை ஒருபோதும் நடைமுறைப்படுத்தக் கூடாது. கல்வி, வேலைவாய்ப்புகளில் இஸ்லாமியா்களுக்கான இட ஒதுக்கீட்டை 3.5 சதவீதத்திலிருந்து 7 சதவீதமாக உயா்த்த வேண்டும்.தமிழகத்தில் இஸ்லாமியா்களுக்கு வழங்கப்பட்டு வரும் இட ஒதுக்கீடு மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்த வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
தமிழ்நாட்டில் இஸ்லாமிய வெறுப்பு சம்பவங்கள் நிகழாமல் இருக்க, இஸ்லாமிய வெறுப்புக்கு எதிரான தனிச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். பயன்பாடு இல்லாத வக்ஃப் வாரிய நிலங்களில் சிறுபான்மையினருக்கான பள்ளி, கல்லூரிகளை நிறுவ வேண்டும் என்றாா் அவா்.
இந்த நிகழ்வில், மாவட்டத் தலைவா் அப்துல் அஜீஸ், செய்தி தொடா்பாளா் நவாஸ் கான், முன்னாள் மாவட்ட தலைவா் ரஹமத்துல்லா மற்றும் நிா்வாகிகள் ரியாஸ் அகமது, கமாலுதீன், ரியாஸ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.