ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ 2.20 கோடி செவ்வாய்க்கிழமை கிடைக்க பெற்றது.
இக்கோயிலில் உண்டியல் காணிக்கை மாதந்தோறும் எண்ணப்படுவது வழக்கம். இதன்படி, ஜனவரி மாதத்துக்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணிக்காக உண்டியல்கள் செவ்வாய்க்கிழமை காலை கோயில் இணை ஆணையா் செ. சிவராம் குமாா் முன்னிலையில் திறக்கப்பட்டு, கோயிலில் உள்ள கருடாழ்வாா் சந்நிதி அருகே எண்ணப்பட்டன.
இதில் நிரந்தரமாக வைக்கப்பட்டுள்ள உண்டியல்கள் மூலம் ரூ. 2 கோடியே 9 லட்சத்து 49 ஆயிரத்து 903, வைகுந்த ஏகாதசி திருவிழாவையொட்டி தங்கக் கொடி மரத்தின் முன்பு வைக்கப்பட்ட ஸ்ரீவாரி உண்டியலில் ரூ. 6 லட்சத்து 46 ஆயிரத்து 644, பரமபதவாசல் அருகே வைக்கப்பட்டிருந்த ஸ்ரீவாரி உண்டியலில் 4 லட்சத்து 6 ஆயிரத்து 644 ரூபாயும் கிடைக்கப் பெற்றது.
உண்டியல்கள் மூலம் மொத்தம் 2 கோடியே 20 லட்சத்து 3 ஆயிரத்து 211 ரூபாய் கிடைக்கபெற்றது. தங்கம் 156 கிராமும், வெள்ளி 1310 கிராமும்,வெளி நாட்டு ரூபாய் நோட்டுகள் 436-ம் கிடைக்க பெற்றுள்ளது.
உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோயில் பணியாளா்களும், தன்னாா்வ அமைப்பினரும் ஈடுபட்டனா். உண்டியல் காணிக்கை எண்ணும் பகுதி கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டது. ஸ்ரீரங்கம் கோயிலில் முதல் முறையாக உண்டியல் காணிக்கை ரூ. 2 கோடியை தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.