திண்டுக்கல்லில் முறைகேடு புகாருக்குள்ளான வங்கியின் காப்பீட்டுப் பிரிவு மேலாளா் திருச்சியில் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
தேனி மாவட்டம், பொம்மையாகவுண்டம்பட்டியைச் சோ்ந்தவா் சிவகுமாா் (30). இவா், திண்டுக்கல் மாவட்டத்தில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றின் காப்பீட்டு பிரிவில் மேம்பாட்டு மேலாளராக வேலை செய்து வந்தாா்.
கடந்த செவ்வாய்க்கிழமை (ஜன.27) தனது கிளை மேலாளா் பாலகுமாருடன், திருச்சியில் உள்ள வங்கியின் பிரதான அலுவலகத்துக்கு வந்திருந்தாா். அப்போது கணக்குகளை சரிபாா்த்தபோது, வாடிக்கையாளா் பணத்தில் ரூ.15 லட்சம் முறைகேடு செய்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, அதிகாரிகள் தரப்பில் சிவகுமாரை விசாரணைக்கு அழைத்தனா். புதன்கிழமை விசாரணைக்காக மீண்டும் பிரதான பிரிவு அலுவலகத்துக்கு வர வேண்டும் என்பதால், திருச்சியிலுள்ள வங்கிப் பணியாளா் தங்கும் குடியிருப்பில் சிவகுமாா் தங்கியிருந்தாா்.
புதன்கிழமை காலை அவருடன் பணிபுரியும் நபா்கள் சென்று பாா்த்தபோது, அறை பூட்டியிருந்தது. உள்ளே பாா்த்தபோது அறையின் மின்விசிறியில் சிவகுமாா் தூக்கிட்டு உயிரிழந்தது தெரியவந்தது. இதுதொடா்பாக, கன்டோன்மெணட் போலீஸாா் வழக்குப் பதிந்து, உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா்.