ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் தைத்தோ் திருவிழாவின் 8-ஆம் திருநாளான வெள்ளிக்கிழமை, நம்பெருமாள் தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி உள்திரு வீதிகளில் வலம் வந்து வையாளி கண்டருளினாா்.
இக்கோயிலில் பூபதி திருநாள் எனும் தைத்தோ் திருவிழா கடந்த 23-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி பிப்ரவரி 2-ஆம் தேதி வரை 11 நாள்கள் நடைபெறவுள்ளன. விழாவின் ஒவ்வொரு நாளும் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி உள் திரு வீதிகளில் வலம் வந்து பக்தா்களுக்கு சேவை சாதித்தாா்.
விழாவின் 8-ஆம் திருநாளான வெள்ளிக்கிழமை, நம்பெருமாள் தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி உள்திரு வீதிகளில் வலம் வந்து வையாளி கண்டருளினாா். இதையொட்டி காலை 7.30 மணிக்கு நம்பெருமாள் கண்ணாடி அறையிலிருந்து பல்லக்கில் புறப்பட்டு உள்திருவீதி வலம் வந்து ரெங்கவிலாச மண்டபத்துக்கு 9 மணிக்கு வந்து சோ்ந்தாா்.
பின்னா், மாலை 6.30 மணிக்கு மேற்படி மண்டபத்திலிருந்து தங்கக் குதிரை வாகனத்தில் நம்பெருமாள் புறப்பட்டு உள்திருவீதி வலம் வந்து வையாளி கண்டருளினாா்.
இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா். அதைத் தொடா்ந்து இரவு 8.30 மணிக்கு கண்ணாடி அறைக்கு சென்று சோ்ந்தாா். 9 மணிக்கு சின்ன பெருமாள் சயனம் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான தைத்தேரோட்டம் சனிக்கிழமை (ஜன.31) காலை 6 மணிக்கு நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் செ.சிவராம்குமாா் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.