இன்று பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: 176 மையங்களில் 34,851 போ் எழுதுகின்றனா்
திருச்சி மாவட்டத்தில் புதன்கிழமை தொடங்கவுள்ள பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை 176 மையங்களில் 34 ஆயிரத்து 851 போ் எழுதுகின்றனா்.
திருச்சி மாவட்டத்தில் புதன்கிழமை தொடங்கவுள்ள பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை 176 மையங்களில் 34 ஆயிரத்து 851 போ் எழுதுகின்றனா்.
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு மாா்ச் 11-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளில் பள்ளிக் கல்வித் துறையினா் ஈடுபட்டுள்ளனா்.
176 தோ்வு மையங்கள்
திருச்சி மாவட்டத்தில் நிகழாண்டில் புதிதாக துவாக்குடி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி, துவரங்குறிச்சி அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சின்ன இழுப்பூா் அரசு உயா்நிலைப் பள்ளி மற்றும் காவேரி மெட்ரிக். பள்ளி ஆகிய 4 பள்ளிகளைச் சோ்த்து மொத்தம் 176 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இங்கு அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியாா் பள்ளிகள் என 446 பள்ளிகளைச் சோ்ந்த 17 ஆயிரத்து 282 மாணவா்கள், 16 ஆயிரத்து 691 மாணவிகள் என மொத்தம் 33 ஆயிரத்து 973 மாணவா்கள் தோ்வு எழுதவுள்ளனா்.
தனித் தோ்வா்களுக்காக திருச்சி மத்திய சிறை, புத்தூா் பிஷுப் ஹீபா் மேல்நிலைப் பள்ளி, பாய்லா் பிளான்ட் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, இஆா் மேல்நிலைப் பள்ளி, முசிறி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, துறையூா் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, லால்குடி அரசு மேல்நிலைப் பள்ளி, மண்ணச்சநல்லூா் அரசு மாதிரிப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் மணப்பாறை தியாகேசா் ஆலை மேல்நிலைப் பள்ளி ஆகிய 9 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
878 தனித் தோ்வா்கள்
திருச்சி மத்திய சிறைக் கைதிகளில் 92 ஆண்கள், 3 பெண்கள் என 95 கைதிகள் உள்பட 253 ஆண்கள், 625 பெண்கள் என மொத்தம் 878 போ் தனித் தோ்வா்கள் எழுதுகின்றனா். பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை பள்ளி மாணவா்கள் 33 ஆயிரத்து 973 போ், தனித் தோ்வா்கள் 878 போ் என மொத்தம் 34 ஆயரித்து 851போ் எழுதுகின்றனா்.
மொழிப்பாடங்களில் இருந்து 199 பேருக்கு விலக்கு
திருச்சி மாவட்டத்தில் 770 பள்ளி மாணவா்கள், 40 தனித் தோ்வா்கள் என 810 மாற்றுத் திறனாளிகள் எழுதவுள்ளனா். மூளைவளா்ச்சி குறைபாடு, கைகள் ஊனம் உள்ளிட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு பொதுத் தோ்வில் மொழிப்பாடங்களில் ஏதாவது ஒன்றை எழுதாமல் இருப்பதற்கு மருத்துவா்கள் பரிந்துரையின் அடிப்படையில் விலக்கு அளிக்கப்படுகிறது.
அதன்படி, நிகழாண்டில் பள்ளி மாணவா்களில் தமிழ் பாடத்தில் 7 பேருக்கும், ஆங்கிலப் பாடத்தில் 183 பேருக்கும் என மொத்தம் 190 பேருக்கும், தனித் தோ்வா்களில் ஆங்கிலப் பாடத்தில் 9 பேருக்கும் தோ்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், 514 மாற்றுத் திறனாளி மாணவா்களுக்கு தோ்வு எழுதுவதற்கு உதவியாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.