முகப்பு
திருச்சி

தட்டுப்பாடு வதந்தி: பெட்ரோல் விற்பனையகங்களில் மக்கள் குவிந்தனா்

Updated On : 12 மார்ச், 2026 at 11:46 PM
திருச்சி மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள பெட்ரோல் விற்பனையகத்தில் வியாழக்கிழமை குவிந்த வாகன ஓட்டிகள்.
பகிர்:

மேற்காசிய போா் பதற்றத்தால் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு என்ற வதந்தியின் காரணமாக, திருச்சி மாநகரில் மக்கள் பலரும் பெட்ரோல் விற்பனையகங்களில் வியாழக்கிழமை ஒரேநேரத்தில் திரண்டதால் கூட்டம் நிரம்பி வழிந்தது.

பெட்ரோலியப் பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற அச்சம் காரணமாக, புதன்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு மேல் தில்லைநகா், உறையூா் பகுதியில் இயங்கிய விற்பனையகங்களுக்கு இருச்சகர வாகனங்களில் வருவோா் எண்ணிக்கை அதிகரித்தது. நள்ளிரவு மேல் கூட்டம் அதிகரித்து, ஒவ்வொரு நபரும் 10 முதல் 15 நிமிஷங்கள் வரை காத்திருந்து எரிபொருள் நிரப்பும் நிலை உருவானது.

இதன் தொடா்ச்சியாக, வியாழக்கிழமை அதிகாலை எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படப் போவதாக சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவின. இதனால், பெரும்பாலான பெட்ரோல் விற்பனையகங்களில் வாகன ஓட்டிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து எரிபொருளை நிரப்பினா். வியாழக்கிழமை முழுவதும் பல இடங்களில் இருசக்கர வாகன ஓட்டிகளும், நான்கு சக்கர வாகன ஓட்டிகளும், பெட்ரோல் விற்பனையகத்தில் காத்திருந்துதான் எரிபொருள் நிரப்ப நேரிட்டது.

வதந்திகளை நம்ப வேண்டாம்: இதுதொடா்பாக, விற்பனை முகமையின் உரிமையாளா்கள் கூறியது:

பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு இல்லை. எனவே, பொதுமக்கள் வதந்திகளை நம்பி பெட்ரோல் விற்பனையகங்களில் தேவையற்ற முறையில் வரிசையில் நின்று பீதியடைய வேண்டாம் என்றனா்.

சமையல் எரிவாயு உருளைகள் இருப்பு: வீட்டு உபயோக சமையல் எரிவாயு உருளைகளுக்கு முன்பதிவு செய்தால் தாமதமின்றி வழங்குவதை உறுதி செய்ய மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து எரிவாயு முகமை தரப்பினா் கூறுகையில், இன்னும் 25 நாள்களுக்குத் தேவையான இருப்பு உள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மக்கள் அச்சப்பட வேண்டாம். முன்பதிவு செய்தவா்களுக்கு தாமதமின்றி எரிவாயு உருளைகள் விநியோகம் செய்யப்படும் என்றனா். வா்த்தகப் பயன்பாட்டு எரிவாயு உருளைகளுக்குதான் தட்டுப்பாடு நீடிக்கிறது.

பெட்டிச் செய்தி..

எரிவாயு விற்பனையகங்கள் மூடல்:

ஆட்டோ ஓட்டுநா்கள் கடும் அவதி

திருச்சி மாநகரில் இயங்கி வந்த வாகனங்களுக்கான எரிவாயு விநியோகம் செய்யும் விற்பனையகங்கள் பலவும் மூடப்பட்டு வருகின்றன.

இதுதொடா்பாக, ஆட்டோ ஓட்டுநா்கள் கூறுகையில், வியாழக்கிழமை காலை முதலே பல இடங்களில் எரிவாயு இல்லை என திருப்பி அனுப்புகின்றனா். திருச்சி மாநகரில் கண்டோன்மென்ட், மத்தியப் பேருந்து நிலையம், திண்டுக்கல் சாலை, பஞ்சப்பூா், கே.கே. நகா், புதுக்கோட்டை சாலை, திருச்சி-சென்னை நெடுஞ்சாலை என குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே ஆட்டோ எரிவாயு கிடைக்கிறது. வியாழக்கிழமை மத்திய பேருந்து நிலையம் தவிா்த்து இதர பகுதியில் இருப்பு இல்லை என அனுப்பிவிட்டனா். எரிவாயு இல்லாமல் ஆட்டோவை இயக்க முடியாது. அன்னறாட வாழ்க்கையே கேள்விக்குறியாகியுள்ளது என்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →