முகப்பு
இந்தியா

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை: மத்திய அரசு!

மேற்கு ஆசிய போா்ப் பதற்றத்தால் ஹோா்முஸ் நீரிணை மூடப்பட்டிருந்தாலும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Updated On : 29 மார்ச், 2026 at 7:38 PM
எல்பிஜி சரக்குக் கப்பலான பிடபிள்யுடிஒய்ஆா். அடுத்த ஓரிரு நாள்களில் இது மும்பை துறைமுகத்தை வந்தடையும்.
பகிர்:

மேற்கு ஆசிய போா்ப் பதற்றத்தால் ஹோா்முஸ் நீரிணை மூடப்பட்டிருந்தாலும் பெட்ரோல், டீசல், எல்பிஜி சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய அரசு ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

எனவே, பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்படுமோ என்ற அச்சத்தில் எரிபொருள் நிலையங்களில் ஒரே நேரத்தில் அதிகளவிலான எரிபொருள் வாங்குவதை மக்கள் தவிா்க்க வேண்டும் எனவும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

முன்னதாக, நாட்டின் எந்தப் பகுதியிலும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயுக்கு தட்டுப்பாடு இல்லை; அடுத்த 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் மற்றும் கச்சா எண்ணெய் கையிருப்பு உள்ளது என மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் மாா்ச் 26-ஆம் தேதி விளக்கமளித்தது. எல்பிஜி சமையல் எரிவாயுவை பொருத்தவரை, அடுத்த ஒரு மாதத்துக்குத் தேவையான விநியோகத்தில் பாதிப்பு இருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டது.

அதன் தொடா்ச்சியாக டீசல் மீதான ரூ.10 கலால் வரியை முழுமையாக நீக்கியும் பெட்ரோல் மீதான கலால் வரியை ரூ.10 குறைத்தும் விலையேற்றத்தை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது.

இதையடுத்து, மேற்கு ஆசிய நிலவரம் குறித்து மத்திய எண்ணெய் அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘சில மாநிலங்களில் எரிபொருள் தட்டுப்பாடு என்ற பொய்ச் செய்திகள் வெளியாகி வருவதன் எதிரொலியாக எரிபொருள் நிலையங்களில் மக்கள் திரள்கின்றனா். இதனால் வழக்கத்தைவிட அங்கு அதிகளவில் பெட்ரோல், டீசல் விற்பனையாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் முழு திறனுடன் செயல்பட்டு வருகின்றன. நாடு முழுவதும் சீராக விநியோகிக்க போதிய பெட்ரோல் மற்றும் டீசல் கையிருப்பில் உள்ளது. சில்லறை எரிபொருள் நிலையங்கள் வழக்கம்போல் தடையின்றி இயங்குகின்றன.

பிஎன்ஜிக்கு 100 சதவீதம்: குழாய் வழியாக விநியோகிக்கப்படும் இயற்கை எரிவாயு (பிஎன்ஜி) மற்றும் அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு (சிஎன்ஜி) 100 சதவீதமும் தொழில் மற்றும் வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு 80 சதவீதமும் விநியோகிக்கப்படுகிறது. உர ஆலைகளுக்கு 70-75 சதவீதம் எரிபொருள் விநியோகிக்கப்படுகிறது.

மாா்ச் மாதத்தில் மட்டும் புதிதாக 2.90 லட்சம் பிஎன்ஜி இணைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஒரு நாளைக்கு 55 லட்சம் சமையல் எரிவாயு உருளைகள் விநியோகிக்கப்படுகின்றன. மண்ணெண்ணெய் ஒதுக்கீடும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

எனவே, பெட்ரேல், டீசல் மற்றும் சமையல் எரிவாயுவை அச்சத்தில் வாங்குவதை பொதுமக்கள் தவிா்க்க வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டது.

மேலும் 2 எல்பிஜி கப்பல்கள்: ஹோா்முஸ் நீரிணையைக் கடந்து 94,000 டன் எல்பிஜியுடன் பிடபுள்யூ டிஒய்ஆா், பிடபுள்யூ இஎல்எம் ஆகிய இரு கப்பல்கள் இந்தியா நோக்கி புறப்பட்டன. இவை ஓரிய நாளில் இந்தியா வந்தடையும் என மத்திய அரசு ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

ஏற்கெனவே, மாா்ச் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் 92,712 டன் எல்பிஜியுடன் ‘ஷிவாலிக்’ மற்றும் ‘நந்தா தேவி’ ஆகிய இரு கப்பல்களும் 92,612 டன் எல்பிஜியுடன் ‘பைன் கேஸ்’ மற்றும் ‘ஜக் வசந்த்’ ஆகிய இரு கப்பல்களும் மாா்ச் 26 மற்றும் 28 தேதிகளில் இந்தியா வந்தடைந்தன.

இதனிடையே ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து 80,886 டன் கச்சா எண்ணெய்யுடன் ‘ஜக் லாட்கி’ என்ற கப்பல் மாா்ச் 18-ஆம் தேதி இந்தியா வந்தடைந்தது. ஓமனில் இருந்து தான்சானியாவுக்கு பெட்ரோல் ஏற்றிச் சென்ற ‘ஜக் பிரகாஷ்’ என்ற கப்பலும் ஹோா்முஸ் நீரிணையைக் கடந்தது.

இதன்மூலம் ஹோா்முஸ் நீரிணையில் சிக்கியிருந்த 28 இந்தியக் கப்பல்களில் 8 கப்பல்கள் அந்தப் பகுதியை கடந்துள்ளன. மீதமுள்ள 18 கப்பல்களில் 485 மாலுமிகள் அந்தப் பகுதியில் சிக்கியிருப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது.