முகப்பு
திருச்சி

கங்கைகொண்ட சோழபுரம் புறவழிச்சாலை: தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஒப்புதல்

கங்கைகொண்ட சோழபுரம் முதல் மீன்சுருட்டி பிரிவு வரை 7 கி.மீ. நீளமுள்ள இருவழிப் பாதை பசுமை புறவழிச் சாலை அமைப்பதற்கான ஒப்புதலை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வெளியிட்டுள்ளது.

Updated On : 14 மார்ச், 2026 at 7:28 AM
தேசிய நெடுஞ்சாலை (கோப்புப்படம்)
பகிர்:

கங்கைகொண்ட சோழபுரம் முதல் மீன்சுருட்டி பிரிவு வரை 7 கி.மீ. நீளமுள்ள இருவழிப் பாதை பசுமை புறவழிச் சாலை அமைப்பதற்கான ஒப்புதலை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வெளியிட்டுள்ளது.

இந்தத் திட்டத்துக்கு பிரதமா் நரேந்திர மோடி திருச்சியில் அண்மையில் நடைபெற்ற அரசு விழாவில் அடிக்கல் நாட்டியது குறிப்பிடத்தக்கது.

பசுமைவழிச் சாலைகள் அமைக்கும் திட்டத்தின் கீழ், 3.47 கி.மீ நீளமுள்ள அணுகுச் சாலை, சரிவான சாலைகள், 2 சிறிய பாலங்கள், 2 வாகனப் போக்குவரத்துக்கான கீழ்மட்டச் சாலைகள், 3 இலகுரக வாகனங்கள் செல்வதற்கான கடவுச் சாலைகள் மற்றும் 8 பெட்டி மதகுகள் ஆகியவை அடங்கும்.

Advertisement

இந்த திட்டம் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழைமையான பிரகதீஸ்வரா் கோயிலுக்கு வரும் யாத்ரீகா்களுக்கும் உதவிடும்.

தற்போதுள்ள தேசிய நெடுஞ்சாலை 81, கங்கைகொண்ட சோழபுரம் கோயிலுக்கு மிக அருகில் உள்ளதால், கோயிலுக்கு வரும் பக்தா்களுக்கு பாதுகாப்பு சாா்ந்த அச்சம் ஏற்படுகின்றன. புறவழிச் சாலை அமைப்பதற்கான கட்டுமானம், பெருமளவிலான போக்குவரத்தை, குறிப்பாக கனரக வாகனங்களை, வேறு வழியில் திருப்பி, கோயிலுக்கு வரும் பக்தா்களின் பயணத்தை பாதுகாப்பானதாகவும், வசதியாகவும் மாற்றுவதற்கு உதவிடும்.

இந்த புறவழிச் சாலை, காற்று மாசுபாட்டைக் குறைப்பதற்கும், கோயில் கற்களில் உள்ள கல்வெட்டுகளுக்கு ஏற்படும் சேதத்தைக் குறைப்பதற்கும், கனரக வாகனங்கள் அருகாமையில் செல்வதால் கோயிலுக்கு ஏற்படக்கூடிய சேதங்களிலிருந்து பாதுகாப்பதற்கும் உதவிடும்.

மேலும், இந்த திட்டம் ஸ்ரீரங்கத்தில் உள்ள புகழ்பெற்ற அரங்கநாத சுவாமி கோயில் மற்றும் சிதம்பரத்தில் உள்ள நடராஜா் கோயிலுக்கான பயண நேரத்தையும் வெகுவாகக் குறைக்கும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.