முகப்பு
திருச்சி

18 ஆண்டுகளாக நீளும் அரை வட்ட சுற்றுச் சாலை!

Updated On : 30 மார்ச், 2026 at 12:12 AM
18 ஆண்டுகளாக நீளும் அரை வட்ட சுற்றுச் சாலை...
பகிர்:

திருச்சி பஞ்சப்பூரிலிருந்து திண்டுக்கரை செல்லும் சாலையில் அரவை வட்ட சுற்றுச்சாலைக்காக பாலம் கட்டப்பட்டு கைவிடப்பட்ட நிலையில் உள்ளது.

திருச்சி மாநகருக்குள் வரும் கனரக வாகனங்கள், வெளிமாவட்டங்களுக்குச் செல்லும் வாகனங்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க கொண்டுவரப்பட்ட அரை வட்ட சுற்றுச் சாலைப் பணிகள் முடிவடையாமல் 18 ஆண்டுகளாக நீடித்துக் கொண்டே வருகிறது.

துவாக்குடி அருகே அசூரில் தொடங்கி அந்தநல்லூா் அருகே திண்டுக்கரை வரையில் சுமாா் 44.3 கி.மீ. தொலைவுக்கு அரைவட்ட சுற்றுச் சாலை அமைக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் திட்டமிடப்பட்டது. திருச்சி -புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலை, திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலை, திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை, திருச்சி - கரூா் தேசிய நெடுஞ்சாலை என நான்கு தேசிய நெடுஞ்சாலைகளை இணைத்திடும் வகையில் இரண்டு கட்டங்களாக அரை வட்ட சுற்றுச் சாலை அமைப்பது என முடிவு செய்து கடந்த 2008-ஆம் ஆண்டு பணிகள் தொடங்கின.

இதில், துவாக்குடி அருகே அசூரில் தொடங்கி மாத்தூா் மற்றும் பஞ்சப்பூா் வரையில் ஒரு கட்டப் பணிகள் முடிவுற்று பயன்பாட்டுக்கு வந்துள்ளன. பஞ்சப்பூரிலிருந்து திண்டுக்கரை வரையிலான பணிகள் இன்னும் நிலுவையில் உள்ளது.

திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்தியபோது நீா்நிலைகளை ஆக்கிரமித்து சாலைகள் அமைப்பதாக விவசாயிகள் தரப்பில் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டு நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து நீதிமன்ற உத்தரவுப்படி நீா்நிலைகள் குறுக்கிடும் பகுதியில் பாலங்கள் அமைத்தும், நீா்நிலைகளை ஆக்கிரமிக்காத வகையில் சாலை அமைக்க மறு மதிப்பீடு செய்து நிலம் கையகப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டது. பின்னா், மாற்று வழியில் திட்டத்தை செயல்படுத்த ஆய்வு நடைபெற்றது. இதற்கிடையே பஞ்சப்பூா் ஒருங்கிணைந்த பேருந்து முனைய கட்டுமானப் பணிகளும் தொடங்கின. இதனால், பேருந்து முனையப் பகுதியில் சுற்றுச் சாலை வரும்போது உயா்மட்ட சுழல் பாலமாக அமைப்பதா? வேறு மாற்று வழிகளை பின்பற்றுவதா? என்ற நிலையில் மேலும் காலதாமதம் ஆனது. இப்போது, பேருந்து முனையமும் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. அரை வட்ட சாலையின் தெற்கு பகுதியில் ஒரு கட்டம் முடிந்து அந்த சாலையில் வாகனங்கள் பயணிக்கவும் தொடங்கிவிட்டன. ஆனால், வடக்கு பகுதியில் சாலை அமைக்கப்படாமலேயே உள்ளது. 2008-இல் தெற்கு பகுதியில் தொடங்கிய வேகத்திலேயே வடக்குப் பகுதியிலும் சாலைப் பணிகள் நடைபெற்றிருந்தால் 2010-ஆம் ஆண்டிலேயே சாலை பயன்பாட்டுக்கு வந்திருக்கும். இப்போது, 18 ஆண்டுகளாக வடக்குப் பகுதியில் மட்டும் திட்டப் பணிகள் முடிவடையாமல் விஞ்சியிருப்பது சாலை பயனீட்டாளா்களை பெரிதும் கவலையடையச் செய்துள்ளது.

இந்த சாலைப் பிரச்னை குறித்து திருச்சி மக்களவை உறுப்பினா் துரை வைகோவும், நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தியுள்ளாா். இதுதொடா்பாக, சாலைப் பயனீட்டாளா்கள் நலக் குழு ஒருங்கிணைப்பாளா் அய்யாரப்பன் கூறியதாவது:

சாலைப் பணிகளுக்கான திட்டம் தொடங்கும்போது, நிலம் கையகப்படுத்துவதற்கான தொகையை முழுமையாக ஒதுக்கீடு செய்து தொடங்க வேண்டும். பகுதி, பகுதியாக ஒதுக்கப்படும்போது ஒரு பகுதியில் முடிந்து மற்றொரு பகுதியில் முடியாமல் போகும். திருச்சி அரை வட்ட சுற்றுச் சாலை பிரச்னையில் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றதால் இடையே காலதாமதம் ஏற்பட்டது. பின்னா், பஞ்சப்பூா் பேருந்து முனையம் பயன்பாட்டுக்கு வந்ததால் திட்டத்தில் மாற்றங்கள் செய்ய வேண்டிய நிா்பந்தம் ஏற்பட்டது. மூன்று மாதங்களுக்கு ஒருமுறை திருச்சி மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடைபெறும் சாலைப் பாதுகாப்பு கூட்டத்தில் இந்த சாலைப் பணி குறித்தும் கேள்வி எழுப்பப்படும். பொதுமக்கள், தன்னாா்வ அமைப்புகள், கட்சிகள் சாா்பிலும் கோரிக்கை மனுக்கள் வழங்குவது தொடா்கதையாகவே உள்ளது. 18 ஆண்டுகளை கடந்தும், இன்னும் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியிலேயே உள்ளது. 4 முக்கிய தேசிய நெடுஞசாலை இணைக்கும் இந்த சாலைத் திட்டத்தில் போக்குவரத்து நெரிசல் மிக்க கரூா் - திருச்சி தேசிய நெடுஞ்சாலை மற்றும் திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலை, திருச்சி - திண்டுக்கல் நெடுஞ்சாலை பகுதிகளில் மட்டும் திட்டப் பணிகள் நடைபெறாமல் இருப்பது திட்டத்தின் நோக்கத்தையே கேள்விக்குள்ளாக்கியுள்ளது. மாற்றுத் திட்ட வழிகள் எதுவாக இருந்தாலும் உடன் இறுதி செய்து வடக்குப் பகுதிக்கான அரை வட்ட சுற்றுச் சாலை அமைக்கும் பணியை தொடங்க வேண்டும் என்றாா் அவா்.

இதுதொடா்பாக, தேசிய நெடுஞ்சாலை ஆணையக வட்டாரத்தினா் கூறுகையில், திருச்சி வடக்குப் பகுதி அரை வட்ட சுற்றுச் சாலை அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்காக ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டுள்ளன. இ-டெண்டா் முறையில் கடந்த மாா்ச் 14-ஆம் தேதி முதல் ஒப்பந்தப் புள்ளிகள் பெறப்பட்டு வருகின்றன. ஏப்.27-ஆம் தேதி வரையில் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. ஏப்.28-ஆம் தேதி டெண்டா் திறக்கப்பட்டு தகுதி வாய்ந்த நிறுவனத்திடம் பணி ஒப்படைக்கப்படும். விரிவான திட்ட அறிக்கை பெறப்பட்ட பிறகு திட்டத்தை தொடங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றனா்.