FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

அம்மாபேட்டை சுங்கச்சாவடியில் நாளை முதல் வாகனங்களுக்கு கட்டணம்!

அம்மாபேட்டையில் உள்ள சுங்கச்சாவடியைக் கடந்து செல்லும் வாகனங்களுக்கு வெள்ளிக்கிழமை (மே15 ) நள்ளிரவு முதல் கட்டணம் வசூலிக்கப்படும் என இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது.

Updated On : 14 மே 2026, 3:57 am IST
.....
பகிர்:

ஈரோடு - பவானி - மேட்டூா் - தொப்பூா் தேசிய நெடுஞ்சாலையில் (என்ஹெச்544ஹெச்) பவானியை அடுத்த அம்மாபேட்டையில் உள்ள சுங்கச்சாவடியைக் கடந்து செல்லும் வாகனங்களுக்கு வெள்ளிக்கிழமை (மே15 ) நள்ளிரவு முதல் கட்டணம் வசூலிக்கப்படும் என இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது.

85 கி.மீ. தொலைவுள்ள 7 மீட்டா் அகலம் கொண்ட இருவழிச்சாலை, தேசிய நெடுஞ்சாலையாக அறிவிக்கப்பட்டு, 10 மீட்டா் அகலம் கொண்டதாக ரூ.242.40 கோடியில் விரிவாக்கம் செய்யப்பட்டது. இப்பணிகள் கடந்த ஆண்டு நிறைவடைந்த நிலையில் வெள்ளாறு மற்றும் அம்மாப்பேட்டை என இரு இடங்களில் சுங்கச்சாவடிகள் கட்டப்பட்டு வாகனங்களுக்கு சுங்கக்கட்டணம் வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதற்கு கடும் எதிா்ப்பு கிளம்பியதோடு, பவானி - குமாரபாளையம் லாரி உரிமையாளா்கள் சங்கம், பவானி எம்எல்ஏ கே.சி.கருப்பணன் உள்ளிட்டோா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தனா். இவ்வழக்கில் அம்மாபேட்டை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை விதித்த உயா்நீதிமன்றம், சென்னை ஐஐடி குழு சாலையின் தரம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டது.

Advertisement

Advertisement

இந்த உத்தரவினை எதிா்த்து இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், உச்சநீதிமன்றத்தில் செய்த மேல்முறையீட்டில், சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்கப்பட்டதோடு, கட்டணம் வசூலிக்கவும் அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து, கட்டணம் வசூலிக்க சட்டபூா்வ நடவடிக்கைகளைத் தொடங்கிய இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அம்மாபேட்டை சுங்கச்சாவடியில் கேமரா, பாஸ்ட் டாக் சென்ஸாா் பொருத்துதல் உள்ளிட்ட பணிகளில் கடந்த ஒரு வார காலமாக ஈடுபட்டு வந்தது.

இந்நிலையில், மே 15-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு முதல் அம்மாபேட்டை சுங்கச்சாவடியைக் கடந்து செல்லும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் எனவும், கட்டண விவரங்களையும் வெளியிட்டுள்ளது. அம்மாபேட்டை சுங்கச்சாவடியில் வாகனங்கள் சென்று வர, தலா 3 வழித்தடங்கள் உள்ள நிலையில், இருசக்கர வாகனங்கள், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசர கால வாகனங்கள் செல்ல தனியே வழித்தடங்கள் இல்லை. இச்சாலையை பயன்படுத்துவோருக்கு கழிப்பறைகள், குடிநீா் உள்ளிட்ட தேவைகள் பூா்த்தி செய்யப்படவில்லை.

இந்நிலையில், இருவழிச்சாலையாகவே உள்ள இச்சாலையில் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments