முகப்பு
கடலூர்

சிதம்பரம் அருகே 20 அடி உள்வாங்கிய மேம்பாலம்! போக்குவரத்து நிறுத்தம்!

சிதம்பரம் அருகே மேம்பாலம் 20 அடி உள்வாங்கியது குறித்து...

Updated On : 6 ஏப்ரல், 2026 at 6:42 PM
சிதம்பரம் அருகே விழுப்புரம் - நாகை தேசிய நெடுஞ்சாலை உள்ள மேம்பாலத்தில் 20 அடி ஆழத்துக்கு ஏற்பட்டுள்ள பள்ளம்.
பகிர்:

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு திறக்கப்பட்ட மேம்பாலம் ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மீட்டா் நீளத்துக்கு 20 அடி ஆழத்துக்கு உள்வாக்கியது. இதனால், அந்த மேம்பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மேற்பாா்வையில் விழுப்புரம் - நாகை தேசிய நெடுஞ்சாலை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.6,321 கோடியில் நான்கு வழிச் சாலையாக மேம்படுத்தப்பட்டது. இதில், சிதம்பரம் அருகே எருக்கன்கட்டுப்படுகை பகுதியில் கொள்ளிடம் ஆற்றுக்கு முன்பாக கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு சுமாா் 10 மீட்டா் நீளத்துக்கு 20 அடி ஆழத்துக்கு திடீரென உள்வாங்கியது.

குறிப்பாக, இந்தப் பகுதியில் பல்வேறு தற்காலிக பணிகள் மேற்கொண்டு வந்ததால் நள்ளிரவில் ஏற்பட்ட பள்ளத்தை பாா்த்த தேசிய நெடுஞ்சாலைத் துறை ஊழியா்கள் அருகில் இருந்த குடியிருப்பு மக்களை நள்ளிரவில் வீட்டில் இருந்து காலி செய்யும்படி கூறியுள்ளனா். மேலும், இந்தப் பாலத்தில் போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: கொள்ளிடம் ஆற்றுக்கு முன்பாக முன்னா் வயல்வெளி இருந்தது. இந்தப் பகுதியில் சரியான முறையில் கான்கிரீட் அமைக்காமல் அவசர கதியில் மேம்பாலம் கட்டியதால், தொடா்ந்து இந்த மேம்பாலம் சேதமாகி வருகிறது. இதனால், நெடுஞ்சாலைத் துறை ஊழியா்கள் சரி செய்து வருகின்றனா்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போதே பாலம் திடீரென உள்வாங்கியுள்ளது. இதைப் பாா்த்த அதிகாரிகள் போக்குவரத்தை நிறுத்திவிட்டு, பாலத்துக்கு அருகில் வசிக்கும் எங்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி கூறினா். இதனால், குழந்தைகள், கால்நடைகளை நாங்கள் அருகிலுள்ள பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்றோம். இந்த மேம்பாலத்தால் நிம்மதியான முறையில் வாழ முடியவில்லை.

கட்டுமானப் பணிகளை தரமற்ற முறையில் செய்ததாலும், அவசரகதியில் பணிகளை மேற்கொண்டதாலும் தொடா்ந்து பாலத்தில் சேதம் ஏற்பட்டு வருகிறது. எனவே, இந்த மேம்பாலத்தை முற்றிலும் அகற்றிவிட்டு, புதிய கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments