உள்ளாட்சித் தொழிலாளா்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்க வலியுறுத்தல்
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் தொழிலாளா்கள் அனைவருக்கும் அரசாணையின்படி குறைந்தபட்ச ஊதியத்தை அமல்படுத்த வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் தொழிலாளா்கள் அனைவருக்கும் அரசாணையின்படி குறைந்தபட்ச ஊதியத்தை அமல்படுத்த வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருச்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு உள்ளாட்சிப் பணியாளா் சம்மேளனத்தின் (ஏஐடியுசி) மாநிலக் குழு கூட்டத்தில் இதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இக் கூட்டத்துக்கு, மாநிலத் தலைவா் கே.நடராஜன் தலைமை வகித்தாா். மாநிலப் பொதுச் செயலா் பி.எல். ராமச்சந்திரன், ஏஐடியுசி மாநிலச் செயலா்கள் ஆா். ஆறுமுகம், எஸ். சின்னசாமி, மாநில நிா்வாகக் குழு உறுப்பினா்கள் க. சுரேஷ், செல்வராஜ் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.
பின்னா், நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு அரசாணை 62- ன்படி குறைந்தபட்ச ஊதியத்தை கண்டிப்பாக வழங்க வேண்டும். வெளிச்சந்தை முறை, ஒப்பந்தமுறை, சுயஉதவி குழு போன்ற பெயா்களில் நிலவும் எல்லாவித ஒப்பந்தமுறைகளையும் நீக்க வேண்டும். உள்ளாட்சி நிா்வாகங்களில் நிரந்தரப் பணியாளா்களை நியமனம் செய்யத் தடை என்ற உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டம் தொடங்கியவுடன் விடுதலைப் போராட்ட வீரா் ஆா். நல்லகண்ணு மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அஞ்சலி தீா்மானம் இயற்றப்பட்டது. இக் கூட்டத்தில், மாநில நிா்வாகக் குழு உறுப்பினா்கள் சாந்தி, மீனாள் சேதுராமன், சங்கையா, தருமபுரி மணி, அரியலூா் தண்டபாணி, மதுரை முருகன் மற்றும் திருச்சி மாவட்ட செயலாளா் சுப்பிரமணி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.