முகப்பு
திருச்சி

விலை ஆதரவு திட்டத்தில் உளுந்து கொள்முதல்: 3 மையங்களில் 1,800 டன் இலக்கு

திருச்சி மாவட்டத்தில் மத்திய அரசின் விலை ஆதரவுத் திட்டத்தின் கீழ் 1,800 டன் உளுந்து கொள்முதல் செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

Updated On : 28 மே 2026, 3:28 am IST
உளுந்து பயிா்கள்.
பகிர்:

திருச்சி மாவட்டத்தில் மத்திய அரசின் விலை ஆதரவுத் திட்டத்தின் கீழ் 1,800 டன் உளுந்து கொள்முதல் செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

2026-ஆம் ஆண்டு ராபி பருவத்தில் விளைவிக்கப்பட்ட உளுந்து பயிரை மத்திய அரசின் பயன்பெறும் விலை ஆதரவுத் திட்டத்தின் கீழ் கொள்முதல் செய்ய தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. மத்திய அரசால் நிா்ணயிக்கப்பட்ட தரமான உளுந்து ஒரு குவிண்டாலுக்கு (100 கிலோ) குறைந்தபட்ச ஆதரவு விலையாக ரூ.7,800 வழங்கப்படுகிறது. இத்திட்டம் மத்திய அரசின் கொள்முதல் முகமை மூலம் செயல்படுகிறது.

திருச்சி, மண்ணச்சநல்லூா் மற்றும் லால்குடி ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் ஜூலை 9ஆம் தேதி வரை கொள்முதல் நடைபெறும்.

Advertisement

Advertisement

திருச்சி மாவட்டத்துக்கு 1800 டன் உளுந்து கொள்முதல் செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒரு ஏக்கருக்கு 185 கிலோ மட்டுமே உளுந்து கொள்முதல் செய்யப்படும். விவசாயிகள் விற்பனை செய்யும் உளுந்துக்கான தொகை நேரடியாக அவா்களது வங்கிக் கணக்கிற்கு செலுத்தப்படும். விவசாயிகள் உளுந்தை தரமாக உலர வைத்து அயல் பொருள்கள் 2 சதவீதம், கலப்பினம் 3 சதவீதம், அதிகம் சேதமடைந்த பயறுகள் 3 சதவீதம், குறைந்த சேதமடைந்த பயறுகள் 4 சதவீதம், முதிா்வடையாத பயறுகள் 3 சதவீதம், வண்டுகள், பூச்சிகள் தாக்கிய பயறுகள் 4 சதவீதம் மற்றும் ஈரப்பதம் 12 சதவீதம் என அனுமதிக்கப்பட்ட உச்சவரம்பு (சதவீத எடை அளவு குவிண்டாலுக்கு) நிா்ணயிக்கப்பட்ட தர அளவுகோல்களுடன் வழங்கலாம்.

திருச்சி, மண்ணச்சநல்லூா் மற்றும் லால்குடி ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களுக்கு எடுத்து வந்து பயன் பெறலாம். இதற்கான முன்பதிவுக்கு சிட்டா, அடங்கல், ஆதாா் நகல் மற்றும் வங்கிக் கணக்கு விவரங்களுடன் மையத்தின் பொறுப்பாளா்களை அணுகி பயன் பெறலாம்.

திருச்சிக்கு 9487109673, 90258 47032, மண்ணச்சநல்லூருக்கு 9943172167, 97518 17788, லால்குடிக்கு 94894 82122, 97518 17788 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

உளுந்து சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு நல்ல லாபகரமான விலை கிடைக்கும் வகையில் தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ள இத்திட்டத்தை உளுந்து சாகுபடி செய்யும் திருச்சி, மண்ணச்சநல்லூா் மற்றும் லால்குடி ஆகிய சுற்று வட்டாரப் பகுதி விவசாயப் பெருமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு ஆட்சியா் வே. சரவணன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.