அரசு உயர்த்தியது; அவர்களும் உயர்த்தினார்கள்!
வேலூர், அக்.27: தமிழக அரசு, பாலுக்கான கொள்முதல் விலையை ரூ.2 வரை உயர்த்தினாலும், தீவனங்களின் விலையும் உயர்ந்துள்ளது. இதனால், பெரும்பங்குத் தொகையை தீவனங்களுக்கே செலவிட வேண்டிய நிலை விவசாயிகளுக்கு ஏற்ப
வேலூர், அக்.27: தமிழக அரசு, பாலுக்கான கொள்முதல் விலையை ரூ.2 வரை உயர்த்தினாலும், தீவனங்களின் விலையும் உயர்ந்துள்ளது.
இதனால், பெரும்பங்குத் தொகையை தீவனங்களுக்கே செலவிட வேண்டிய நிலை விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் பால் உற்பத்தியாளர்கள் தங்களுக்குக் கட்டுப்படியாகும் வகையில், பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.4 உயர்த்தி வழங்கக் கோரிக்கை விடுத்திருந்தனர். இதுதொடர்பாக விவசாயிகள், பால் கூட்டுறவு ஒன்றியத்தினரோடு தமிழக அரசு பேச்சு நடத்தியது.
Advertisement
ஆனால், பசும்பாலுக்கு ரூ.2 வரையும், எருமைப் பாலுக்கு ரூ.5 வரையும் கொள்முதல் விலையை உயர்த்திய தமிழக அரசு, உடனடியாக விற்பனை விலையிலும் ரூ.2 வரை உயர்த்தியிருக்கிறது. அரசின் இந்தக் கொள்முதல், விற்பனை விலை உயர்வு பட்டியல் செப்டம்பர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்தது.
இதைத் தொடர்ந்து, சில்லரை விலையில் அரை லிட்டர் சமன்படுத்திய பால் ரூ.9.75-க்கும், நிலைப்படுத்திய பால் ரூ.12 எனவும் விற்பனையாகிறது. ரூ.2 வரை மட்டும் உயர்த்துவதாக அறிவித்த அரசு, விற்பனை விலையில் ரூ.3 முதல் ரூ.4 வரை உயர்த்தியுள்ளது.
தரம், தரத்துக்கு ஏற்ற விலை எனும் அடிப்படையில் பாலின் கொழுப்புச் சத்து, இதர சத்துகளைக் கணக்கிட்டு, அதிகபட்சமாக லிட்டருக்கு ரூ.18.42 வரை கிடைக்கும் வகையில் கொள்முதல் செய்ய அரசு பட்டியலிட்டுள்ளது.
ஆனால், 75 சதவீதம் விவசாயிகள் அளிக்கும் பாலுக்கு லிட்டருக்கு ரூ.15.15 வரையே கிடைக்கிறது. அரசு அறிவித்த அதிகபட்ச விலை ரூ.18 என்பதை இந்த 75 சதவீதம் பேர் பெறுவதில்லை.
இவர்களது பாலில் கொழுப்புச் சத்து, இதர சத்துகள் குறைவாகவே இருப்பதே இதற்குக் காரணம். தரமான மாடுகள் வைத்திருக்கும் விவசாயிகள், தீவனங்களை சரியான விகிதத்தில் கலந்து கொடுத்தால் மட்டுமே தரமான பால் கிடைக்கும். லிட்டருக்கு ரூ.18 வீதம் 10 லிட்டர் பால் பெற ரூ.150 வரை தீவனங்களுக்குச் செலவிட வேண்டியுள்ளது என்கின்றனர் விவசாயிகள். லிட்டருக்கு ரூ.15 பெறும் விவசாயிகள் கூட 10 லிட்டர் பால் பெற ரூ.115 வரை செலவிட வேண்டியுள்ளது என்கின்றனர்.
அரசு பால் கொள்முதல் விலையை ரூ.2 வரை உயர்த்துவதாக அறிவித்த சில நாள்களில், அனைத்து தீவனங்களின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளன.
மாடுகளுக்கான மொத்த செலவில் பெரும்பங்கு வகிப்பது தீவனங்களே. கிலோ ரூ.10.65 ஆக இருந்த அடர் தீவனம், தற்போது ரூ.11.60 வரை விற்கப்படுகிறது. கடலை புண்ணாக்கு ஒரு கிலோ ரூ.22-ல் இருந்து ரூ.27-ஆகவும், கோதுமை தவிடு 35 கிலோ ரூ.310-ல் இருந்து ரூ.370-ஆகவும், புளி நொய் ஒரு கிலோ ரூ.11.40-ல் இருந்து ரூ.12.35-ஆகவும், கடலைப் பொட்டு 25 கிலோ ரூ.142-ல் இருந்து ரூ.160-ஆகவும் உயர்ந்துள்ளது.
சொந்தமாக மாடு வைத்திருக்கும் விவசாயி, அவர் மட்டுமே உழைத்து, தினசரி 20 லிட்டர் பால் அளித்தால் ரூ.40 முதல் ரூ.50 வரை லாபம் பெறுகிறார். ஆனால், தற்போது தீவனங்களின் விலை உயர்வால், வருவாய் குறைந்துள்ளது.
இதனால், விலை குறைவான கிழங்குமாவு, பீர் வேஸ்ட் ஆகியவற்றைத் தீவனமாகத் தருகின்றனர். ஆனால், அரசு குறிப்பிட்ட கொழுப்பு, இதர சத்துகள் என எதுவுமற்ற பால்தான் கிடைக்கிறது. இதை கூட்டுறவு சங்கங்கள் பெறுவதில்லை. இவற்றைத் தனியார் சிலர் பெற்றுச் செல்கின்றனர். தரமற்ற தீவனங்களால் விவசாயிகளுக்கு எவ்விதத்திலும் வருவாய் கிடையாது.
விவசாயிகள் கோரிக்கை: ஈரோட்டில் மட்டுமே ஆவின் நிர்வாகம் சார்பில் மாட்டுத் தீவனங்கள் உற்பத்தி தொழிற்சாலை இயங்குகிறது. ஏற்கெனவே, ஆம்பூர், மதுரை, சென்னை பகுதிகளில் இயங்கிவந்த தீவன தொழிற்சாலைகளைக் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு அரசு மூடிவிட்டது. இவற்றைத் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விவசாயிகளுக்கும் மானிய விலையில் தீவனங்கள் கிடைக்கச் செய்யவும், பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்தி வழங்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தீவனங்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.