மாடுகளுக்கு மருத்துவர் உண்டு; மருந்து இல்லை கறவை மாடுகளுக்காக ஒதுக்கீடு செய்யும் ரூ.2.25 கோடி வீண்?
வேலூர், அக். 28: பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களின் கறவை மாடுகளுக்கு இலவச சிகிச்சை அளிக்க ஆவின் ஒதுக்கீடு செய்யும் ரூ.2.25 கோடி வீணாகிறது என்ற புகார் வலுத்து வருகிறது. மேலும், அரசும
வேலூர், அக். 28: பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களின் கறவை மாடுகளுக்கு இலவச சிகிச்சை அளிக்க ஆவின் ஒதுக்கீடு செய்யும் ரூ.2.25 கோடி வீணாகிறது என்ற புகார் வலுத்து வருகிறது.
மேலும், அரசும், ஆவின் நிர்வாகமும் மருந்துகள் வாங்குவதில் சரிவர செயல்படாததால், மாடுகளுக்கு உரிய சிகிச்சையை அளிக்க முடியாமல் தனியார் மருந்தகங்கள் மற்றும் மருத்துவர்களை நாட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
தமிழகம் முழுவதும் 17 பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியங்களின் (ஆவின்) கீழ் மொத்தம் 8,012 பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் செயல்படுகின்றன. இவை தினசரி 25 லட்சம் லிட்டர் பால் பெற்று, ஆவினுக்கு அனுப்புகின்றன.
Advertisement
கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர்களாக உள்ள விவசாயிகளின் கறவை மாடுகள், கன்றுகள் நோய்வாய்ப்பட்டால், விவசாயிகளுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
இதனால், அவர்களுடைய கால்நடைகளுக்கு ஆவின் நிர்வாகம் சார்பில் இலவச சிகிச்சை அளிக்க வேண்டும் என்கும் இதற்கென தனியாக நிதி ஒதுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
இதையேற்று தமிழக அரசு கடந்த 2008-ம் ஆண்டு முதல் லிட்டருக்கு 2.5 பைசா வீதம் இந்த மருத்துவச் செலவுகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டது.
இதன்படி, ஒவ்வொரு ஒன்றியத்திலும் லிட்டருக்கு 2.5 பைசா வீதம் தினசரி 25 லட்சம் லிட்டருக்கு ரூ.62,500 பிடித்தம் செய்யப்படுகிறது.
இந்த வகையில் கால்நடைகளின் மருத்துவச் செலவுக்கு என ஆண்டுக்கு ரூ.2.28 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஆனால், சில ஒன்றியங்கள் இவ்வாறான ஒதுக்கீட்டைத் தனியாக மேற்கொள்ளாமல் பொது நிதியிலேயே வைத்துள்ளன என்ற புகாரும் எழுந்துள்ளது.
ஆவின் மூலம் கிராமப்புறங்களில் உள்ள மாடுகளுக்கு சிகிச்சை அளிக்க என கால்நடை மருத்துவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் நியமிக்கப்பட்டு பணியாற்றுகின்றனர். வாரம் ஒரு முறை ஒவ்வொரு கூட்டுறவு சங்கத்துக்கும் செல்லும் இம் மருத்துவர்கள், அங்கு கொண்டு வரப்படும் கால்நடைகளைப் பரிசோதித்து மருந்து எழுதித் தருகின்றனர்.
இவற்றை விவசாயிகள் தனியார் மருந்தகங்களில் பணம் செலவழித்து வாங்க வேண்டிய நிலையில்தான் உள்ளனர்.
இது குறித்து மருத்துவர்களிடம் கேட்டால், ஆவின் நிர்வாகத்திலிருந்து தங்களுக்கு மருந்து ஏதும் தரப்படவில்லை என்று கூறுகின்றனர்.
ஆனால், "சுயமாக மருந்துகள் வாங்க அரசு அனுமதி அளிக்கவில்லை. கால்நடைத்துறை அறிவித்த மருந்து நிறுவனங்களிடம் இருந்து மருந்துகளை வாங்க அரசு அறிவுறுத்துகிறது. இதனால், மருந்துகள் கேட்டு கால்நடைத்துறைக்கு கடிதம் அனுப்புகிறோம். அங்கிருந்து இதுவரை மருந்துகள் ஏதும் வரவில்லை' என்று ஆவின் நிர்வாகம் கூறுகிறது.
"அரசு மற்றும் ஆவின் நிர்வாகக் குளறுபடிகளால், விவசாயிகளின் கால்நடைகளுக்கு உரிய மருத்துவ சிகிச்சை கிடைப்பதில்லை. இதனால், நீண்ட தொலைவுக்கு கால்நடைகளை அழைத்துச் செல்ல வேண்டியிருக்கிறது. நோய்கள் தாக்கும் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க, இலவச மருத்துவ முகாமை கால்நடைத்துறை நடத்தும் வரை காத்திருக்கவும் முடியாது' என்கின்றனர் விவசாயிகள்.
இது குறித்து தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்க மாநிலத் தலைவர் கே.முகமது அலி புதன்கிழமை கூறியது:
ஆவின் நிர்வாகம் மருந்து கேட்டும் இதுவரை கால்நடைத்துறை மருந்து தரவில்லை என்றே கூறப்படுகிறது. இப் பிரச்னையைத் தீர்க்க, தமிழகத்தில் உள்ள அனைத்து ஆவின் நிறுவனங்களும், சுயமாகத் தங்களுக்குத் தேவையான மருந்துகளைக் கொள்முதல் செய்ய அரசு அனுமதிக்க வேண்டும்.
அவ்வாறு செய்யும்போது, கூட்டுறவு சங்கங்களின் பால் வரத்துக்கு ஏற்ப மருந்துகள் ஒதுக்கீடு, மருத்துவர்கள் முறையானபடி சிகிச்சை அளிப்பது, சிகிச்சைக்கு ஒதுக்கப்படும் தொகையை முறையாகச் செலவிட்டதற்கான கணக்குகள் எனப் பால் உற்பத்தியாளர்கள் கேட்டறிய முடியும். கால்நடைகளுக்கு தேவையான சிகிச்சையும் சரியாகக் கிடைக்கும்.
எனவே, மாடுகளுக்கு சிகிச்சை அளிக்க அனைத்து ஆவின் நிர்வாகங்களும் நிதி ஒதுக்க வேண்டும். கால்நடை மருத்துவர்களைச் சரியான எண்ணிக்கையில் பணியமர்த்த வேண்டும். ஆவின் நிர்வாகமே மருந்துகளை கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.