முகப்பு
வேலூர்

பம்ப் ஆபரேட்டர்கள் பற்றாக்குறை: கிராமங்களில் குடிநீர் விநியோகத்தில் சிக்கல்!

அரக்கோணம், ஆக 22: கிராம ஊராட்சிகள் பலவற்றில் போதுமான எண்ணிக்கையில்  பம்ப் ஆபரேட்டர்கள் இல்லாமையால் குடிநீர் விநியோகம் செய்வதில் சிக்கல் நீடிக்கிறது. தற்போதைய ஊராட்சிகள் ஒன்றுக்கும் மேற்பட்ட கிராமங்களை

Updated On : 27 டிசம்பர், 2023 at 5:12 PM
பகிர்:

அரக்கோணம், ஆக 22: கிராம ஊராட்சிகள் பலவற்றில் போதுமான எண்ணிக்கையில்  பம்ப் ஆபரேட்டர்கள் இல்லாமையால் குடிநீர் விநியோகம் செய்வதில் சிக்கல் நீடிக்கிறது.

தற்போதைய ஊராட்சிகள் ஒன்றுக்கும் மேற்பட்ட கிராமங்களை உள்ளடக்கியதாக உள்ளன. குடிநீர் விநியோகத்துக்காக இக்கிராமங்களில் பல இடங்களில் ஆழ்துளை கிணறுகள் போடப்பட்டு, மேல்நிலை தேக்கத் தொட்டிகளில் நீர் தேக்கப்படுகிறது.

இந்த நீரை சீராக ஊராட்சியில் உள்ள அனைத்து குடியிருப்பு பகுதிகளுக்கும் கிடைக்கும் வரையில் அவ்வப்போது முறைவைத்து விநியோகிக்கும் பணியை பம்ப் ஆபரேட்டர்கள் செய்து வருகின்றனர்.

தற்போது கிராமப் பகுதிகளில் மனைகள், குடியிருப்பு பகுதிகள் விரிவடைந்து வருகின்றன.  இதனால் அனைத்து பகுதிகளுக்கும் சீராக குடிநீர் விநியோகம் செய்வதில் சிக்கல் ஏற்படுகிறது. மின்சாரம் இருக்கும் நேரத்தில் அனைத்து குடியிருப்புகளுக்கும்  சீராக குடிநீரை விநியோகிக்கும் பொறுப்பு பம்ப் ஆபரேட்டர்களிடத்தில் உள்ளது.  இதற்காக ஆங்காங்கே திறப்பு குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அரக்கோணத்தை அடுத்த காவனூர் ஊராட்சி 10 கி.மீட்டர் சுற்றளவில் விரிந்துள்ளது.  இந்த கிராமத்திற்காக 25 இடங்களில் ஆழ்துளை கிணறுகள் போடப்பட்டுள்ளன. 10 இடங்களில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் உள்ளன. இவற்றை இயக்குவதற்காக 45 இடங்களில் வால்வுகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றை இயக்க 7 ஆபரேட்டர்கள் உள்ளனர். இதுபோன்று குடிநீர் விநியோகத் திட்டம் பல கிராமங்களில் விரிவடைந்துள்ளது.

குறிப்பிட்ட எண்ணிக்கையில் பம்ப் ஆபரேட்டர்கள் இல்லாத நிலை ஏற்படும்போது,  பொதுமக்கள் உபயோகத்துக்கு சரிவர குடிநீர் விநியோகம் செய்ய முடியாத சூழலும், அதனால் கிராமத்தினர் பாதிப்பு அடைவதும், சாலை மறியல் போன்ற எதிர்ப்புகளை தெரிவிக்க முற்படுவதும் தொடர்கதையாக உள்ளது.

பம்ப் ஆபரேட்டர் பணி பகுதிநேரப் பணியாக உள்ளது. இவர்களுக்குரூ. 1,370 மாத ஊதியமாக வழங்கப்படுகிறது. இருப்பினும் மின்சாரம் இருக்கும்போது ஆழ்துளை கிணறுகள் ஒவ்வொன்றையும் இயக்கி, மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகளைக் கண்காணித்து நீர் நிரப்பும் பணியில் பம்ப் ஆபரேட்டர்கள் முழுநேரத்தை செலவிடும் நிலை உள்ளது.

இதனால், ஒவ்வொரு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கும் ஒரு பம்ப் ஆபரேட்டர் நியமனமும், புதிதாக மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்படும் நிலையில், அதற்கு உடனடியாக புதிய பம்ப் ஆபரேட்டரும் நியமிக்கும் நடவடிக்கையை அரசு நிர்வாகம் எடுத்தால், கிராமப்புறங்களில் குடிநீர் விநியோகம் செய்வதில் எவ்வித தடையும் ஏற்படாது என்று சமூக ஆர்வலர்கள் கருத்து கூறுகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.