முகப்பு
வேலூர்

தாமதமாக வழங்கப்பட்ட காசோலைகள்: காலாவதியானதால் பயனாளிகள் அவதி

கிருஷ்ணகிரி, ஜூன் 29:  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சமுக நலத் துறையின் சார்பில் திருமண நிதியுதவிக்கான  காசோலைகள் தாமதமாக வழங்கப்பட்டன. இவை காலாவதியானதால், பயனாளிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.  மூவலூர் ராமாமி

Updated On : 20 செப்டம்பர், 2012 at 6:41 PM
பகிர்:
Updated On : 27 டிசம்பர், 2023 at 9:59 PM

கிருஷ்ணகிரி, ஜூன் 29:  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சமுக நலத் துறையின் சார்பில் திருமண நிதியுதவிக்கான  காசோலைகள் தாமதமாக வழங்கப்பட்டன. இவை காலாவதியானதால், பயனாளிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

 மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டத்துக்காக, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த நிதியாண்டில் ரூ.4 கோடியே 2 லட்சத்து 80 ஆயிரம் நிதியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்தது. இதற்காக 2,014 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

 இத்திட்டத்தின் கீழ் கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை, காவேரிப்பட்டணம் உள்ளிட்ட இடங்களில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில், 200-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு தலா ரூ.20 ஆயிரம் நிதியுதவிக்கான காசோலைகள் அண்மையில் வழங்கப்பட்டன. இந்த காசோலைகள் 18.3.10-ம் தேதியிட்டு வழங்கப்பட்டுள்ளன. இவை 3 மாதங்கள் மட்டுமே செல்லுபடியாகுமாம்.

Advertisement

 இவற்றை பெற்ற பயனாளிகள் உடனடியாக வங்கிக்குச் சென்று தொகையை பெற முயன்றபோது, அரசு வழங்கிய காசோலைகள் காலாவதியாகி விட்டதாக வங்கி அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அரசு வழங்கிய திட்டப் பயனை பெற முடியாமல், பயனாளிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

துணை முதல்வர் வழங்கவிருந்த

காசோலைகளும் காலாவதி?

 இந்நிலையில், கிருஷ்ணகிரியில் விரைவில் நடைபெற உள்ள அரசு நிகழ்ச்சியில் பங்கேற்கும் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் பயனாளிகளுக்கு வழங்கவிருந்த காசோலைகளும் காலாவதியானதாகவும், இதில், 500-க்கும் மேற்பட்ட பயனாளிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

காரணம் என்ன?

 கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சமூக நலத் துறை அலுவலர் பணியிடம் கடந்த 2 ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ளது. தற்போது, திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த அலுவலர் செரீன் பிலீப் கூடுதலாகப் பொறுப்பு வகித்து வருகிறார். இவர் கிருஷ்ணகிரி, தருமபுரி, நீலகிரி மாவட்டங்களுக்கான சமுக நலத் துறை பொறுப்பு அலுவலராகவும் கடந்த சில மாதங்களாக பணியாற்றி வருகிறாராம். இதனால், காசோலைகளில் கையொப்பம் பெற திருப்பூர் செல்வதாகவும், இதனால் காலதாமதம் ஏற்படுவதாகவும் சமூக நலத் துறை ஊழியர்கள் கூறுகின்றனர்.

நியமனம் எப்போது?

 குழந்தை கடத்தல் சம்பவம், இளம் வயது திருமணம், சிசுக் கொலைகள் உள்ளிட்ட சம்பவங்கள் அதிகமாக நடக்கும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சமுக நலத் துறையில் அலுவலர் இல்லாமல் இருப்பது மாவட்ட மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

புதிய காசோலைகள் வழங்க நடவடிக்கை:

 இந்நிலையில், காலாவதியான காசோலைகளை திரும்பப் பெற்று, புதிய காசோலைகள் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வி.அருண்ராய் கூறியது:

 காசோலைகள் காலாவதியான தகவல் இரு நாள்களுக்கு முன்தான் தெரிய வந்தது. இதுகுறித்து ஆய்வு செய்தேன். பாதிக்கப்பட்டவர்களிடம் காசோலைகளைப் பெற்று, புதிய காசோலைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் தங்களது பழைய காசோலைகளுடன் சமூக நலத் துறை அலுவலகத்தை அணுகலாம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.