வேலூர்

தருமபுரி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு தொழிற்பயிற்சி பள்ளி அமையுமா?

தருமபுரி, ஜூன் 29: தருமபுரி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான தொழிற்பயிற்சி பள்ளி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.  கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு ஆகியவற்றில் பின்தங்கியுள்ள தருமப

ஆர்.சரவணன்

தருமபுரி, ஜூன் 29: தருமபுரி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான தொழிற்பயிற்சி பள்ளி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

 கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு ஆகியவற்றில் பின்தங்கியுள்ள தருமபுரி மாவட்டத்தில் போதிய தொழில்வளம் இல்லை. இதனால் படித்த இளைஞர்களும் வேலைத் தேடி வெளியிடங்களுக்குச் செல்கின்றனர்.

14 ஆயிரம் மாற்றுத் திறனாளிகள்!

 இந்நிலையில், தருமபுரி மாவட்டத்தில் உள்ள 14 ஆயிரம் மாற்றுத் திறனாளிகளில் பெரும்பாலானோர் போதிய வேலைவாய்ப்பின்றி உள்ளனர். இவர்களில் 35 சதவீதம் பேர் முதியோர்.

அரசின் உதவித் தொகையைத் தவிர எவ்வித உதவியோ, பராமரிப்போ இன்றி முதியோர் இல்லம், தனியார் தொண்டு நிறுவனங்களில் உள்ளனர்.

பள்ளிகளில் இடைநிற்போர் அதிகம்?

 மாவட்டத்திலுள்ள மாற்றுத் திறனாளிகளில் 53 சதவீதம் பேர் மாணவர்கள். இவர்களில் பெரும்பாலானோர் பொதுப் பள்ளிகளில் தொடர்ந்து கல்வி பயில முடியாமல் இடைநிற்கும் நிலை உள்ளது. பொதுப் பாடங்களை கற்று தேர்ச்சியடைவதற்கு கற்றல் அடைவுத் திறன் குறைவாக உள்ளதாலும், குடும்ப வறுமையும் பள்ளி இடைநின்றலுக்கு காரணமாக அமைந்துள்ளன. நடப்பாண்டில் மாற்றுத் திறனாளி குழந்தைகள் 22 சதவீதத்தினர் கல்வி பயில முடியாமல் இடைநின்றுள்ளது தெரியவந்துள்ளது.

 இதனால், மாற்றுத் திறனாளி குழந்தைகளை தொடர்ந்து படிக்க வைக்கவும், அவர்களின் மனரீதியான செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலும், அவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தும் தொழிற்கல்வி பள்ளியை ஏற்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

 தருமபுரி மாவட்டத்தில் 8 சிறப்பு பள்ளிகள் செயல்படுகின்றன. இவற்றில் வாய் பேச முடியாதவர்களுக்கான 1 அரசு மேல்நிலைப் பள்ளி, காதுகேளாதவர்களுக்கான 2 உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மனநலன் குன்றியோர்கள், பார்வையற்றவர்களுக்காக ஆரம்ப பயிற்சி மட்டும் வழங்கும் தொண்டு நிறுவன பள்ளிகள் அடங்கும்.

 மாற்றுத் திறனாளிகளில் சிறப்பு பயிற்சி அளித்து பாதுகாக்கக் கூடிய  2,500 மனநலன் குன்றியோர்கள் உள்ளனர். இவர்களுக்கு சிறப்பு தொழில் பயிற்சி கட்டமைப்பு மாவட்டத்தில் இல்லாததால் இவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. மனநலன் குன்றிய குழந்தைகளுக்கு கல்வி, தொழில் வழிகாட்டுதல் முறையாக இல்லாததால், அவர்களின் எதிர்காலம் என்ன ஆகும் என்ற கவலை தற்போது

பெற்றோர் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

கோரிக்கைகள் நிறைவேறுமா?

 அரசு சார்பில் சிறப்பு தொழில் மையங்களை உருவாக்கி, மனநலன் குன்றியவர்களின் திறனுக்கேற்ப தொழில் பயிற்சியை அளித்து, அவர்களின் வாழ்க்கை மேம்பட அரசு  நடவடிக்கை எடுக்க வேண்டும். கூடுதலாக சிறப்புப் பள்ளிகள், காப்பகங்கள் தொடங்க வேண்டும். வேலைவாய்ப்பை அளிக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மனநலன் குன்றியவர்கள் கல்வி கற்க சிறப்புக் கல்வித் திட்டம் உருவாக்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என்பதே மாற்றுத்திறனாளிகளின் பெற்றோர், பாதுகாப்பாளர்களின் கருத்தாக உள்ளது.

விரைவில் நடவடிக்கை?

 இதுகுறித்து தருமபுரி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் இம்தியாஸ்அகமது கூறியது:

 மாற்றுத் திறனாளிகளுக்கு அனைத்து உதவிகள், மருத்துவச் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மாற்றுத் திறனாளிகள் அதிகமாக இம்மாவட்டத்தில், இவர்களுக்கேற்ற தொழிற்பயிற்சி வழங்க விரைவில் அனைத்து  கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்தப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகாரில் நாற்காலியில் மறைத்துவைத்து மது கடத்தல்! சோதனையில் அதிர்ச்சி!

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

கங்கனாவுடன் என்ன பிரச்னை? தாப்ஸி விளக்கம்!

SCROLL FOR NEXT