வெண்குன்றம் மலைப்பாதை சீரமைக்கப்படுமா?
வந்தவாசி, நவ.3: கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி வந்தவாசியை அடுத்த வெண்குன்றம் கிராமத்தில் உள்ள மலை மீது செல்லும் மலைப்பாதையை சீரமைக்க இந்து அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந
வந்தவாசி, நவ.3: கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி வந்தவாசியை அடுத்த வெண்குன்றம் கிராமத்தில் உள்ள மலை மீது செல்லும் மலைப்பாதையை சீரமைக்க இந்து அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
வந்தவாசியிலிருந்து சுமார் 3 கி.மீ. தூரத்தில் உள்ளது வெண்குன்றம் கிராமம். இக்கிராமத்தில் ஸ்ரீதவளகிரி என்று அழைக்கப்படும் மலை உள்ளது.
இம்மலை மீது ஸ்ரீதவளகிரீஸ்வரர் கோயில் உள்ளது. மேலும் விநாயகர், அம்பாள், முருகன், சண்டிகேஸ்வரர், அண்ணாமலையார் கோயில்களும் உள்ளன.
ஆண்டுதோறும் கார்த்திகை தீபத்தின்போது வந்தவாசி மற்றும் அதைச் சுற்றியுள்ள சென்னாவரம், செம்பூர், மாம்பட்டு, ஆராசூர், அம்மையப்பட்டு, மும்முனி, புலிவாய், தென்னாங்கூர், வடநாங்கூர், பாதிரி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மலை மீது ஏறிச்சென்று இறைவனை வழிபடுவது வழக்கம்.
இம்மலை மீது பக்தர்கள் ஏறி இறங்குவதற்கு ஒரே பாதைதான் உள்ளது. இந்நிலையில் மலைப் பாதையில் கருங்கற்கள் ஒழுங்கின்றி காணப்படுவதாலும், செடி, கொடிகள் முளைத்து பாதையை மறைத்துள்ளதாலும் மலைக்கு செல்லும் பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
இதனால் கூட்டநெரிசலில் விபத்து ஏற்படவும் வாய்ப்பு இருப்பதால், இம்மாதம் 21-ம் தேதி நடைபெறவுள்ள கார்த்திகை தீபத்தையொட்டி, போர்க்கால அடிப்படையில் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் மலைப்பாதையை சீரமைக்க வேண்டும் என சுற்றுப்பகுதி கிராமத்தினர் எதிர்பார்க்கின்றனர்.