பந்தோபஸ்து பணியால் வெறிச்சோடும் காவல் நிலையங்கள்
அரக்கோணம், நவ.28: பந்தோபஸ்து பணிகளுக்காக காவலர்களை அதிக அளவில் பயன்படுத்துவதால் காவல் நிலையங்களில் பணிகள் பாதிக்கப்படுகின்றன. இதனால் ஆயுதப்படையினரை மட்டுமே பந்தோபஸ்து பணிக்கு பயன்படுத்த வேண்டும் என்ற
அரக்கோணம், நவ.28: பந்தோபஸ்து பணிகளுக்காக காவலர்களை அதிக அளவில் பயன்படுத்துவதால் காவல் நிலையங்களில் பணிகள் பாதிக்கப்படுகின்றன. இதனால் ஆயுதப்படையினரை மட்டுமே பந்தோபஸ்து பணிக்கு பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
நவம்பர் மாதத்தில் மட்டும் 6-க்கும் மேற்பட்ட பந்தோபஸ்து பணிகளுக்காக வேலூர் மாவட்ட காவலர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். கார்த்திகை தீபம், ஏலகிரிக்கு ஆளுநர் வருகை, கடலூர், மதுரை, வேலூர் உள்ளிட்ட மூன்று நகரங்களில் முதல்வர் வருகை, துணை முதல்வர் வருகை என பந்தோபஸ்து பணிக்காக காவலர்கள் சென்றனர். ஒவ்வொரு பணிக்கும் 3 நாள்கள் என 18 நாள்கள் காவல் நிலையங்களில் காவலர்கள் இல்லை. இந்த நாள்களில், காவல் நிலையங்களில் ஒரு பாராகாரர், ஒரு எழுத்தர், ஒரு தலைமைக் காவலர் மட்டுமே பணியில் இருந்தனர். நகர காவல் நிலையங்களில்மட்டும் பந்தோபஸ்து நாள்களில் கூடுதலாக ஒரு உதவி ஆய்வாளர் அனுமதிக்கப்படுகிறார்.
தக்கோலம், வாழப்பந்தல், பனமடங்கி, வேப்பங்குப்பம், ஆலங்காயம், குரிசிலாப்பட்டு போன்ற கிராமப்புற காவல் நிலையங்களில் ஒரே ஒரு பாராகாரர் மட்டுமே பணியில் இருக்க அனுமதிக்கப்படுகிறார்.
இந்த நாள்களில் கிராமங்களில் ஏற்படும் தகராறுகளின்போது சம்பந்தப்பட்டவர்கள் பாதுகாப்பு கோறினால் கூட அவர்களைக் காப்பாற்ற முடியாத நிலை ஏற்படுகிறது. அங்கு ஏதாவது ஒரு குற்றம் நடைபெற்று முடிந்த பிறகு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய மட்டுமே காவலர் அங்கு செல்கிறார்.
அனைத்து மகளிர் காவல் நிலையங்களோ பந்தோபஸ்து நாள்களில் பூட்டப்பட்டு விடுகின்றன. இதனால் மகளிர் பிரச்னைகள் தொடர்பான புகார்களை கொடுக்கச் செல்பவர்கள் ஏமாற்றமடைகின்றனர்.
நகரங்களில் அன்றாட போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணிகள் நடைபெறாததால் போக்குவரத்து விதிமீறல்கள் அதிகம் நடக்கின்றன. விபத்துகளும், நெரிசலும் ஏற்படுகின்றன. குறிப்பாக இந்த நாள்களில் மதுவிலக்கு குற்றங்கள் அதிகளவில் நடப்பதாகக் கூறப்படுகிறது.
புகார் கொடுக்க வருபவர்களிடம், "மூன்று நாள்களுக்கு யாரும் காவல் நிலையத்தில் இல்லை. பிறகு வாருங்கள்' என காவலர்களே சொல்லி திருப்பியனுப்பும் நிலை இருந்தால் குற்றங்கள் நடக்கத்தானே செய்யும்? என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
இந்த நவம்பர் மாதத்தில் காவல் நிலையங்களில் முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்ட விவரங்கள், சமூகப் பணி பதிவேடுகளில் புகார்கள் பதிவு செய்யப்பட்ட விவரங்களை கண்காணித்தாலே அதிகாரிகளுக்கு இது நன்றாகத் தெரியவரும்.
எனவே, பந்தோபஸ்து பணிக்கு போலீஸôரை அனுப்பும் நடவடிக்கையைக் கைவிட வேண்டும். அவர்களுக்குப் பதிலாக ஆயுதப் படையினரை கூடுதலாகப் பணியமர்த்தி பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது.