முகப்பு
வேலூர்

ரயில் பெட்டி இணைப்பு உடைந்த சம்பவம்: தயாரிப்பு பிரிவே காரணம்

அரக்கோணம், அக்.11: அரக்கோணம் ரயில்நிலையத்தில் சேரன் எக்ஸ்பிரஸ் ரயில்பெட்டிகளிடையே இணைப்பு உடைந்ததற்கு பராமரிப்புப் பிரிவு காரணமல்ல, தயாரிப்பு பிரிவே காரணம் என அதிகாரிகளின் ஆய்வில் தெரியவந்துள்ளது.   ச

Updated On : 27 டிசம்பர், 2023 at 5:51 PM
பகிர்:

அரக்கோணம், அக்.11: அரக்கோணம் ரயில்நிலையத்தில் சேரன் எக்ஸ்பிரஸ் ரயில்பெட்டிகளிடையே இணைப்பு உடைந்ததற்கு பராமரிப்புப் பிரிவு காரணமல்ல, தயாரிப்பு பிரிவே காரணம் என அதிகாரிகளின் ஆய்வில் தெரியவந்துள்ளது.

  சென்னை சென்ற சேரன் எக்ஸபிரஸ் ரயில் அக்டோபர் 5-ம் தேதி அரக்கோணம் ரயில்நிலையத்தில் நின்று புறப்பட்ட போது அந்த ரயிலின் 8-வது மற்றும் 9-வது பெட்டிகளுக்கிடையே இருந்த இணைப்பு உடைந்து தண்டவாளத்தில் விழுந்தது.

  இதனால் முன் பாதிப் பெட்டிகள் என்ஜினுடன் சென்றுவிட்ட நிலையில் பின்னால் வந்துகொண்டிருந்த பெட்டிகள் நின்று விட்டன. இதனால் பயணிகளுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை.

  இச்சம்பவம் ரயிவே அதிகாரிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சில சமயம் இணைப்புகள் கழன்று விடுவது வாடிக்கை. பெட்டிகளை இணைக்கும் போது திரெட் சரியாக பொருந்தாமல் போனால் பெட்டிகள் கழன்று கொள்ளும். இது பல முறை நடந்துள்ளது. ஆனால் இம்முறை அந்த இணைப்புடன் சேஸிஸ் பகுதியே உடைந்து கீழே விழுந்துள்ளது.

  இதையடுத்து சென்னை கோட்ட தலைமை இயந்திரவியல் பொறியாளர், பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலை பெட்டிகள் வடிவமைப்புத்துறை தலைமை பொறியாளர் உள்ளிட்ட அதிகாரிகளைக் கொண்ட குழுவினர் அரக்கோணம் வந்து குறிப்பிட்ட ரயில் பெட்டியை பலமுறை ஆய்வு செய்தனர். ஆய்வின் முடிவில் இது பராமரிப்பில் ஏற்பட்ட கோளாறு அல்ல, முழுக்க முழுக்க தயாரிப்புப் பிரிவின் மெக்கானிக்கல் தவறுகளே காரணம் எனத் தெரிவித்துள்ளனர்.

  குறிப்பிட்ட பெட்டி 1996-ம் ஆண்டு பெரம்பூர் இன்டகரல் ரயில்பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டது. அப்பெட்டியின் அடுத்த தீவிர ஆய்வு 2012-ம் ஆண்டு நடத்தப்பட வேண்டும். இடையிடையே மாதமொருமுறை நடத்தப்படும் பராமரிப்பு ஆய்வும் அப்பெட்டியில் அவ்வப்போது நடந்து வந்துள்ளது. மேலும் இணைப்பு திரெட் சரியாக இருக்கிறதா என பரிசோதிக்கும் தினசரி ஆய்வும் அந்த ரயில் கோயம்புத்தூரில் இருந்து புறப்படும் முன் நடந்துள்ளது.

  ரயில் பெட்டிகளை பொறுத்த அளவில் வீல், ஸ்பிரிங், சேஸிஸ் ஆகியவற்றிற்கான முழு பொறுப்பு பெட்டிகள் தயாரிக்கப்படும் பெரம்பூர் தொழிற்சாலையினுடையது தான். பிரேக், கப்ளிங், பெட்டிகள், மின்சார இணைப்புகள் ஆகியவற்றை ரயில்நிலைய பராமரிப்பு பணியாளர்கள் பார்ப்பார்கள்.

  இந்தியன் ரயில்வேயில் இது போன்று இணைப்பு உடையும் சம்பவம் இதற்கு முன் 5 முறை நடந்துள்ளதாம். கடைசியாக 5 வருடங்களுக்கு முன் ஆந்திர மாநிலம் விஜயவாடா ரயில்நிலையம் அருகே பாசஞ்சர் ரயில் மெதுவாக சென்ற போது இணைப்பு கழன்று உடைந்துள்ளது.

  இது போன்ற சம்பவம் தொடர்ந்து 6 முறை நடந்து விட்டதாலும், கடந்த காலங்களை விட தற்போது பெட்டிகளின் ஓட்ட தூரமும், நேரமும் அதிகரித்துள்ளதாலும் தீவிர ஆய்வு காலத்தை, 16 ஆண்டுகளுக்குப் பிறகு என்பதை 12 ஆண்டுகளாகக் குறைக்கலாம் என அதிகாரிகள் யோசனை தெரிவித்துள்ளனர்.

  அரக்கோணம் ரயில் நிலையத்தில் இணைப்புகள் உடைந்த பெட்டி தற்போது தீவிர ஆய்வுக்காக பெரம்பூர் ரயில்பெட்டி தொழிற்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.