முகப்பு
வேலூர்

கிருஷ்ணகிரி அருகே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே பாலம் கட்டப்படுமா?

கிருஷ்ணகிரி, செப்.2: கிருஷ்ணகிரி அருகே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்க வேண்டுமென்ற விவசாயிகளின் 50 ஆண்டு கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படாமல் உள்ளது.   கிருஷ்ணகிரி அருகே உள்ள திப்பனப்பள்ளி மற்ற

Updated On : 20 செப்டம்பர், 2012 at 10:43 PM
பகிர்:
Updated On : 27 டிசம்பர், 2023 at 10:51 PM

கிருஷ்ணகிரி, செப்.2: கிருஷ்ணகிரி அருகே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்க வேண்டுமென்ற விவசாயிகளின் 50 ஆண்டு கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படாமல் உள்ளது.

  கிருஷ்ணகிரி அருகே உள்ள திப்பனப்பள்ளி மற்றும் கூளியம் ஊராட்சிகளுக்கு இடையே தென்பெண்ணை ஆறு செல்கிறது. கூளியம், செம்படமுத்தூர், எண்ணோக்கோல்புதூர், ஒப்பலக்கட்டு, அம்மநேரி, சவுளூர், ஒட்டப்பட்டி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் நெல், கரும்பு, வாழை போன்ற பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர்.

  இவ்விவசாயிகள் விதை, உரம் உள்ளிட்ட விவசாய பொருள்களை வாங்க வேண்டும் என்றாலும், விளை பொருள்களை விற்பனைக்கு கொண்டு செல்வதாக இருந்தாலும் ஆற்றைக் கடந்துதான் செல்லவேண்டும்.

Advertisement

சிரமத்தில் மக்கள்: அப்பகுதியில் பாலம் இல்லாததால் அவர்கள் ஆற்றில் இறங்கி நடந்துதான் செல்ல வேண்டும். அவ்வாறு செல்லும் போது நீரில் நனைந்து உரம், தானியம் போன்றவை வீணாகும் நிலை உள்ளது. உழவுக்காக செல்ல வேண்டுமானால் கலப்பை, மாடுகள் உள்ளட்டவற்றை அக்கரையில் கொண்டு சேர்ப்பது சிரமமாக உள்ளது. ஆற்றை கடக்கும் பெண்கள் மேலும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

   அவ்வாறு ஆற்றை கடந்து செல்லும்போது திடீர் வெள்ளம் ஏற்பட்டு, சில விவசாயிகள் உயிரிழந்த சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.

50 ஆண்டு கோரிக்கை: இதனால், அப்பகுதியில் பாலம் அமைக்க வேண்டும் என 50 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயிகள் கோரி வருகின்றனர். கடந்த 2008-ம் ஆண்டு அப்போதைய ஆட்சியர் வே.க.சண்முகம் இப்பகுதியை ஆய்வு செய்து, நபார்டு வங்கி உதவியுடன் பாலம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். ஆனால் இதுவரை பாலம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்படவில்லை.

  எனவே ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்க மாவட்ட நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.