திருவண்ணாமலை, செப்.16: நிலத்தடி நீர் மேம்பாட்டு பணியில் செங்கம் ஊராட்சி ஒன்றியம் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் 1988-ன் கீழ் நாடு முழுவதும் நிலத்தடி நீர்வளத்தை ஒழுங்குபடுத்தும் வகையிலும், அதை மேம்படுத்தி நிர்வகிக்கும் வகையிலும் மத்திய நிலத்தடி நீர் பொறுப்பு ஆணையம் அமைக்கப்பட்டது.
இச்சட்டத்தின்படி நீர் ஆதாரம் தொடர்பாக எந்த நபர், அதிகாரி அல்லது அமைப்புகளுக்கு வழிகாட்டுதல்களை வழங்கவும், எழுத்துபூர்வமாக தொடர்பு கொள்ளவும், அதன்படி செயல்பட ஆணையத்துக்கு அதிகாரம் தரப்பட்டுள்ளது.
இந்நிலையில் மத்திய நிலத்தடி நீர் பொறுப்பு ஆணையம் மாநில அரசுகளுடன் சேர்ந்து மேற்கொண்ட நிலத்தடி நீர் ஆதார கணக்கெடுப்பின் அடிப்படையில் ஆந்திரம், குஜராத், ஹரியானா, கர்நாடகம், கேரளம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, தில்லி, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் சில பகுதிகளை அதிக நீர் உறிஞ்சும் பகுதிகளாக கண்டறியப்பட்டு, அப்பகுதிகளில் நிலத்தடி நீர் சராசரி அளவை விட அதிகம் உறிஞ்சப்பட்டிருப்பதும், நீர் மட்டம் ஆண்டுக்கு ஆண்டு தொடர்ந்து குறைந்து வருவதும் கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில் நிலத்தடி நீர்வளத்தை ஒழுங்குபடுத்தும் வகையிலும், நீரை உறிஞ்சக் கூடிய அமைப்புகளான கிணறுகள், குழாய் கிணறுகள், போர்வெல் கிணறுகள் உள்ளிட்டவை குறித்த அனைத்து தகவல்களையும் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டது. 2006-ம் ஆண்டு இதற்கான பணிகள் நடைபெற்றன.
தமிழகத்தில் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஒன்றியம், திருச்சி மாவட்டத்தில் துறையூர், சேலம் மாவட்டத்தில் தலைவாசல், கெங்கவல்லி ஒன்றியங்கள் அதிக நீர் உறிஞ்சும் பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளன. செங்கத்தில் மட்டும் 218 சதவீதம் நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
செங்கம் ஊராட்சி ஒன்றியம் விவசாய நிலங்கள் அதிகம் உள்ள பகுதியாகும். ஜவ்வாது மலையை ஒட்டி உள்ள இங்கு முக்கிய தொழிலே விவசாயம்தான். 25 ஆயிரம் ஹெக்டேருக்கு மேல் விவசாய நிலங்கள் உள்ளன.
63 கிராமங்களைக் கொண்டு இங்கு 9 ஆயிரம் விவசாய கிணறுகளும், 1000 குடிநீர் கிணறுகளும் உள்ளதாக ஆய்வில் கணக்கிடப்பட்டுள்ளது. மத்திய நிலத்தடி நீர் பொறுப்பு ஆணையம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், பொதுப்பணித் துறை ஆகியவை நிலத்தடி நீர் மட்டத்தை மேம்படுத்தும் அமைப்புகளாகும். இவை நீராதாரங்களான ஏரிகள், பாசனக் கால்வாய்கள், ஆறுகளில் நீரை தேக்கும் வகையில் தடுப்பணைகள், கசிவுநீர் குட்டைகள் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
செங்கம் தவிர, இதர பகுதிகளான தலைவாசல், கெங்கவல்லி, ஒன்றியங்களில் நிலத்தடி நீர் மேம்பாட்டு பணிகள் நடந்து முடிந்துள்ளன. ஆனால் செங்கம் ஒன்றியத்தில் எவ்வித பணிகளும் நடைபெறவில்லை எனத் தெரிகிறது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக நீர் மேலாண்மை பிரிவு மூலமும் 63 கிராமங்களிலும் ஆய்வு மேற்கொள்ள்பட்டது. அதனடிப்படையில் நிலத்தடி நீர் மேம்பாட்டுக்காக 44 கிராமங்களில் உள்ள நீராதாரங்களை மேம்படுத்துதல், நிலத்தடி நீர் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், தரிசு நில மேம்பாடு, தடுப்பணைகள் கட்டுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதுதொடர்பாக செங்கம் ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் ஜி.குமார் கூறியது:
தமிழகத்திலேயே அதிக நிலத்தடி நீர் உறிஞ்சப்படும் பகுதியாக செங்கம் ஒன்றியம் உள்ளது. 218 சதவீதம் நீர் உறிஞ்சப்படுகிறது. இதுதொடர்பாக மத்திய நிலத்தடி நீர் பொறுப்பு ஆணையம், பொதுப்பணித் துறைக்கு கடிதம் எழுதி உள்ளோம். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தொடர்ந்து பருவ மழையும் பொய்த்து விட்டது.
நிலத்தடி நீராதாரத்தை மேம்படுத்தாவிடில் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே மாநில அரசாவது தலையிட்டு செங்கம் ஒன்றியத்தில் நிலத்தடி நீர் மேம்பாட்டு பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.