சேதமடைந்துள்ள தேத்துறை பள்ளிக் கட்டடம் தலைக்குமேல் ஆபத்துடன் கல்வி பயிலும் மாணவர்கள்
வந்தவாசி, பிப். 12: வந்தவாசி அருகே தேத்துறை கிராமத்தில் உள்ள பள்ளிக் கட்டடம் சேதமடைந்து உள்ளது. இதனால் அப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் தலைக்குமேல் ஆபத்துடன் கல்வி பயின்று வருகின்றனர். வந்தவாசி-காஞ்சி
வந்தவாசி, பிப். 12: வந்தவாசி அருகே தேத்துறை கிராமத்தில் உள்ள பள்ளிக் கட்டடம் சேதமடைந்து உள்ளது. இதனால் அப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் தலைக்குமேல் ஆபத்துடன் கல்வி பயின்று வருகின்றனர்.
வந்தவாசி-காஞ்சிபுரம் சாலையில் உள்ள இக்கிராமத்தில் இச்சாலையை ஒட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 54 மாணவ, மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர்.
இப்பள்ளியில் 3 கட்டடங்கள் அடுத்தடுத்து உள்ளன. இதில் சாலையோரம் உள்ள கட்டடம் மிகவும் மோசமாக சேதம் அடைந்துள்ளது. இக்கட்டடத்தின் கான்கிரீட் ஸ்லாப்பில் பல இடங்களில் சிமென்ட் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகிறது.
ஜன்னல் ஓர சுவர்களில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளது. இக்கட்டட வெளிப்புறச் சுவரின் அடிப்புறமும் சேதம் அடைந்த நிலையில் உள்ளது.
இந்தக் கட்டடத்தை அடுத்துள்ள இரண்டாவது கட்டடத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிமென்ட் ஓடுகளால் ஆன மேற்கூரையை அகற்றிவிட்டு மங்களூர் ஓடுகள் பொருத்தி உள்ளனர். ஆனால் ஓடுகள் பொருத்தும் பணி சரியாக செய்யாததால் மழைநீர் ஒழுகுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இதை அடுத்துள்ள மூன்றாவது கட்டடத்தை கடந்த ஆண்டு சீரமைத்துள்ளனர். இந்தக் கட்டடம் மட்டுமே தற்போது நல்ல நிலையில் உள்ளது. ஆனால், இந்த மூன்றாவது கட்டடத்தை சத்துணவு பொருள்கள் வைக்கும் இருப்பு அறையாக பயன்படுத்துகின்றனர். சேதம் அடைந்த முதல் கட்டடத்திலும், மழைநீர் ஒழுகும் 2-வது கட்டத்திலும் மாணவர்கள் அமர்ந்து கல்வி பயில்கின்றனர்.
ஆனால், மூன்றாவது கட்டடம் நல்ல நிலையில் இருந்தும் அந்த கட்டடத்தை பொருள்கள் வைக்கும் இருப்பு அறையாக பயன்படுத்துவது தங்களுக்கு மிகவும் வேதனை அளிப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.
மேலும், பள்ளி வளாகத்தில் உள்ள குடிநீர்த் தொட்டியை சுற்றி சுகாதாரச் சீர்கேடு நிலவுகிறது. இப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லை.
இதனால் இருவழிச் சாலையான வந்தவாசி-காஞ்சிபுரம் சாலையை ஒட்டி சுமார் 10 அடி தூரத்தில் உள்ள இப்பள்ளியில் மாணவர்கள் பள்ளி விட்டவுடன் வெளியே ஓடும்போது சாலையில் செல்லும் வாகனங்களில் சிக்கும் அபாயம் உள்ளது. பள்ளி கழிவறையும் சுகாதாரமாக இல்லை.
எனவே, சேதமடைந்த பள்ளிக் கட்டடத்தைச் சீரமைக்க வேண்டும், பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும், சுகாதாரச் சீர்கேட்டை போக்க வேண்டும், நல்ல நிலையில் உள்ள கட்டடத்தில் மாணவர்கள் கல்வி பயில நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.