வேலூர்

ஆளும் கட்சிகளுக்குத் தலைவலியாகும் திருப்பூர் பிரச்னை!

திருப்பூர், மார்ச் 3: கடந்த 5 ஆண்டுகளில் திருப்பூர் பின்னலாடை உற்பத்தித் தொழில் பல்வேறு சிக்கல்களையும், நெருக்கடிகளையும் சந்தித்து வந்துள்ளது. அந்த பாதிப்புகளைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு ந

என். தமிழ்ச்செல்வன்

திருப்பூர், மார்ச் 3: கடந்த 5 ஆண்டுகளில் திருப்பூர் பின்னலாடை உற்பத்தித் தொழில் பல்வேறு சிக்கல்களையும், நெருக்கடிகளையும் சந்தித்து வந்துள்ளது.

அந்த பாதிப்புகளைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்த போதிலும், பெரும்பாலான பிரச்னைகள் தீர்க்கப்படாமல் தொடர்கின்றன.

தொழில் மற்றும் தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ள இந்தப் பாதிப்புகள், வருகிற சட்டப்பேரவை தேர்தலில் பெருமளவில் எதிரொலிக்கும் என்றே கருதப்படுகிறது.

பல்வேறு மாநில, மாவட்டங்களைச் சேர்ந்த 5 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் இடமாகத் திகழும் திருப்பூர் குறுகிய காலத்தில் ஏற்றுமதி வர்த்தகத்தில் ரூ. 11 ஆயிரம் கோடியும், உள்நாட்டு வர்த்தகம் மூலம் ரூ. 5 ஆயிரம் கோடியும் ஈட்டும் அளவுக்கு வளர்ந்தது. இருப்பினும், இத்தொழில் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு நெருக்கடிகளைக் கடந்துதான் வளர்ந்துள்ளது.

குறிப்பாக, கடந்த 2004ம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட சி-ஃபார்ம் 10 சதவீத வரி விதிப்பால் திருப்பூரிலுள்ள சிறு, குறு பின்னலாடை உற்பத்தியாளர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகினர். அவ் வரிவிதிப்பை ரத்துசெய்யுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அதிமுக ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பிறகு, 2006-ல் ஆட்சிக்கு வந்த திமுக சி-ஃபார்ம் வரியாக 10 சதவீதம் செலுத்திவிட்டு ஆண்டு

இறுதியில் 9 சதவீதத்தைத் திருப்பப்பெற நடவடிக்கை மேற்கொண்டது. இருப்பினும், நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக அத்திட்டம் சிறு, குறு உற்பத்தியாளர்களுக்கு பலனளிக்கவில்லை.

டெபாசிட் தொகை கட்டினாலே மின் இணைப்பு வழங்கப்பட்ட நிலையில், 2008-09ம் ஆண்டுக்குப் பிறகு 5 எச்பி. திறனுக்கு மேல் மின் இணைப்பு கோரும் நிறுவனத்தினர் மின்கம்பம், கம்பிகள், ஊழியர்களின் ஊதியம் உள்ளிட்டவற்றுக்கான தொகையையும் செலுத்த வேண்டும் என்று மின்வாரியம் உத்தரவிட்டது. இதனால், நிறுவனங்களுக்கான வாடகைக் கட்டடங்களின் கட்டுமானம் குறைந்தது. இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி தொடர்ந்து எழுப்பப்பட்ட கோரிக்கைக்கும் அரசுத் தரப்பில் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

நூல் விலை உயர்வு:

உள்நாட்டுத் தேவையைக் கருத்தில் கொள்ளாமல் அதிகப்படியான பஞ்சு ஏற்றுமதிக்கு அனுமதி அளித்ததன் விளைவாக, கடந்த 2008ம் ஆண்டுக்குப் பிறகு பஞ்சு, நூல் விலை கடுமையாக உயரத் துவங்கியது. இதனால் உள்நாட்டு ஜவுளி நிறுவனங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை விளக்கி விடுக்கப்பட்ட கோரிக்கையை அடுத்து மத்திய ஜவுளித்துறை அமைச்சகம் பஞ்சு ஏற்றுமதிக்கான உச்சவரம்பாக 55 லட்சம் பேல்களாகவும், நூல் ஏற்றுமதிக்கு 720 மில்லியன் கிலோவாகவும் நிர்ணயம் செய்தது. அரசின் இந்த நடவடிக்கையும் நடைமுறையில் பலலளிக்கவில்லை; தொடர்ந்து நூல் விலை உயர்ந்து கொண்டிருப்பதால், இத்தொழில் மென்மேலும் தொடர்ந்து பாதிப்புக்குள்ளாகிக் கொண்டிருக்கிறது.

இதற்கிடையே, விலைவாசி உயர்வு, வாடகை உயர்வால் பாதிக்கப்பட்டு வரும் தொழிலாளர்களின் நலனுக்காக தொகுப்பு வீடுகள் கட்டப்படும் என்று தமிழக பட்ஜெட்டில் கூறப்பட்டது.

அத்திட்டமும் அமலாக்கப்படவில்லை. அத்தியாவசியப் பொருட்கள் விலையேற்றம், தொழில் முடக்கம் போன்ற காரணங்களால் வெளிமாவட்டத் தொழிலாளர் வருகை குறைந்ததுடன், திறன்மிக்க தொழிலாளர்களை திருப்பூர் பின்னலாடைத் தொழில் இழந்துகொண்டுள்ளது.

பெட்ரோல், டீசல் விலையுயர்வு, சரக்குப் போக்குவரத்து கட்டணம் அதிகரிப்பு, மூலப்பொருட்கள் விலையேற்றம், தொடர் மின்தடை, ஜெனரேட்டருக்கான டீசல் மானியம் கிடைக்காதது உள்ளிட்ட காரணங்களால் பின்னலாடைத் தொழில் மீளாத்துயரில் சிக்கியது.

சாயக்கழிவு நீர்ப் பிரச்னை:

இவற்றையெல்லாம்விட கடந்த 15 ஆண்டுகளாக நிலவும் சாயக் கழிவுநீர் பிரச்னைக்கு இதுவரை நிரந்தரத் தீர்வு காணப்படவில்லை. சாயஆலை உரிமையாளர்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று பொது சுத்திகரிப்பு நிலையங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் ரூ. 320 கோடி மானியம் ஒதுக்கியபோதும் (அத்தொகை இதுவரை சேரவில்லை என்பது வேறு விஷயம்) இப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படவில்லை.

நீதிமன்ற உத்தரவுப்படி சாய, சலவை ஆலைகள் மூடப்பட்டுள்ளதால், ஒட்டுமொத்த பனியன் தொழிலும், லட்சக்கணக்கான தொழிலாளர்களும் ஸ்தம்பிக்கும் நிலை காணப்படுகிறது.ஏற்றுமதி வர்த்தகத்தைப் பொருத்த வரை சர்வதேச நிதி நெருக்கடியால் கடந்த 2008-ம் ஆண்டில் பல நாடுகள் பாதிக்கப்பட்டு டாலர் விலைவீழ்ச்சி ஏற்பட்ட போது வங்கிகளின் தவறான வழிகாட்டுதலால் "டிரைவேட்டிவ்' என்ற ஊக பேர வணிக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட திருப்பூர் எற்றுமதி நிறுவனங்களுக்கு ரூ. 350 கோடி வரை இழப்பு ஏற்பட்டது. இப்பிரச்னைக்கு தீர்வு காண மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்காததால், பாதிக்கப்பட்ட நிறுவனங்கள் தாங்களே ஒருங்கிணைந்து அமைப்பைத் துவங்கி உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளன.

பாதிப்பில் நடுத்தர

ஏற்றுமதியாளர்கள்:

டூட்டி டிராபேக் 12.5 சதவீதத்திலிருந்து 7.5 சதமாகக் குறைப்பு, தொழில்நுட்ப மே ம்பாட்டு திட்ட (டஃப்) நிதி நிறுத்தம், தூத்துக்குடி துறைமுகத்தில் துறைமுகக் கழகத்துக்கும் சரக்கு கையாளும் தனியார் நிறுனத்துக்கும் இடையே நிலவும்

பிரச்னையால் ஏற்றுமதி சரக்குகளுக்கு துறைமுகத்தில் ஏற்படும் சிக்கல்கள் உள்ளிட்ட பிரச்னைகளால், திருப்பூரிலுள்ள நடுத்தர ஏற்றுமதியாளர்களுக்கும் வெகுவாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு நெருக்கடிகளில் சிக்கித் தவிக்கும் திருப்பூர் நிறுவனங்களுக்கு மேலும் சுமையை ஏற்படுத்தும் வகையில், தற்போது உள்நாட்டு பின்னலாடை வர்த்தகத்துக்கு மத்திய பட்ஜெட்டில் 10 சதம் கலால் வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளுக்குத் தீர்வு காண மத்திய, மாநில அரசுகள் அவ்வப்போது நடவடிக்கை எடுத்தபோதிலும் அவை முழுமையான பலன் தராத நிலையே தொடர்கிறது.

மேற்கண்ட காரணிகளால் திருப்பூர் தொழில்துறையும் பல்வேறு மாவட்டத் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மறுபுறம் சட்டப் பேரவை தேர்தலில் ஆளும் கட்சிகளுக்கு பாதகமான சூழலையையும் உருவாக்கியுள்ளது.

வருகிற சட்டப் பேரவைத் தேர்தலில், இந்தப் பாதிப்புகள் திருப்பூர் பனியன் தொழிலைச் சார்ந்துள்ள பல மாவட்டங்களிலும் எதிரொலிக்கும் என்றே கருதப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகாரில் நாற்காலியில் மறைத்துவைத்து மது கடத்தல்! சோதனையில் அதிர்ச்சி!

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

கங்கனாவுடன் என்ன பிரச்னை? தாப்ஸி விளக்கம்!

SCROLL FOR NEXT