முகப்பு
வேலூர்

தனியார் பள்ளிகளுக்கு 8ஆம் வகுப்புக்கு புத்தகங்கள் வரவில்லை காலாண்டு தேர்வு எழுதுவது எப்படி?

அரக்கோணம், செப்.8: புத்தகமே இதுவரை வராத நிலையில் செப்டம்பர் 3-வது வாரம் தொடங்கும் காலாண்டு தேர்வை எப்படி எழுதுவது என தனியார் பள்ளிகளில் 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். அனைத்து

Updated On : 28 டிசம்பர், 2023 at 6:26 PM
பகிர்:

அரக்கோணம், செப்.8: புத்தகமே இதுவரை வராத நிலையில் செப்டம்பர் 3-வது வாரம் தொடங்கும் காலாண்டு தேர்வை எப்படி எழுதுவது என தனியார் பள்ளிகளில் 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

அனைத்து அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கு சமச்சீர் பாடப் புத்தகங்கள் விநியோகிக்கப்பட்ட நிலையில், தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு மட்டும் 8ஆம் வகுப்புக்கான புத்தகங்கள் இதுவரை கிடைக்காமல் இருப்பதற்கு காரணம் தெரியாமல் பள்ளி நிர்வாகங்கள் தவிக்கின்றன.

பாடப் புத்தகங்களை தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் மண்டல அலுவலகங்கள் மூலம் விநியோகிக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, வேலூர் மாவட்டத்தில் அனைத்து அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளின் அனைத்து வகுப்புகளுக்கும் புத்தகங்கள் வழங்கப்பட்டன.

மெட்ரிக் பள்ளிகளாக இருந்த தனியார் பள்ளிகளுக்கு மாவட்ட மெட்ரிக். பள்ளிகளின் ஆய்வாளர் மூலம் ஊருக்கு ஒரு நோடல் பள்ளி தேர்வு செய்யப்பட்டு, அந்த பள்ளி  மூலம் அனைத்து பள்ளிகளுக்கும் புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டன.

இதில் 4ஆம் வகுப்புக்கு சமூக அறிவியல் பாடப் புத்தகமும், 7ஆம் வகுப்புக்கு அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடப் புத்தகங்களும் இன்னும் வழங்கப்படவில்லை. 8ஆம் வகுப்புக்கு அறிவியல் பாடப் புத்தகம் மட்டுமே மெட்ரிக் பள்ளிகளுக்கு விநியோகம் செய்ய வந்துள்ளன. பிற பாடப் புத்தகங்கள் எதுவும் இதுவரை வரவில்லை.

இப்புத்தகங்கள் எப்போதும் விநியோகம் செய்யப்படும் என கேட்பதற்காக திருவண்ணாமலையை தலைமையிடமாகக் கொண்ட மெட்ரிகுலேஷன் பள்ளி ஆய்வாளரை அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டாலும், அவர் எடுக்கவில்லை. இதனால் அரசுத் தரப்பின் பதிலை அறிய இயலவில்லை.

மாணவர்கள் நலனை கருத்தில்கொண்டு, பள்ளிக் கல்வித் துறை உடனடியாக இவ்விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்பதே மெட்ரிக் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை படிக்க வைத்துள்ள பெற்றோரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.