வேலூர், ஜூலை 6: வேலூரிலிருந்து சென்னைக்கு சாதாரணக் கட்டணத்தில் 10 பேருந்துகள் வெள்ளோட்டமாக விடப்பட்டுள்ளன.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் வேலூர் வழியாகச் சென்னைக்கு தினமும் 180-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஏற்கெனவே பேருந்து கட்டணம் உயர்த்தப்படுவதற்கு முன்னர் வேலூரிலிருந்து சென்னைக்கு விரைவுப் பேருந்துகளில் ரூ. 46-ம், சாதாரணப் பேருந்துகளில் ரூ. 41-ம் கட்டணங்களாக வசூலிக்கப்பட்டன.
கட்டணம் உயர்த்தப்பட்ட பின்னர் அனைத்துப் பேருந்துகளும் விரைவுப் பேருந்துகளாக மாற்றப்பட்டு ரூ. 81 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டன. மீண்டும் சாதாரணக் கட்டணத்தில் பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என்பது பயணிகளின் நீண்டநாள் எதிர்பார்ப்பாக இருந்து வந்தது. இதுகுறித்து அரசுக்கும், போக்குவரத்துக் கழக அலுவலர்களுக்கும் கோரிக்கைகள் வந்தன. வேலூர் காட்பாடி ரயில் நிலையத்திலிருந்து சென்னைக்கு சாதாரண பயணிகள் ரயிலில் ரூ. 24-ம், அதிவிரைவு ரயில்களில் ரூ. 49-ம் கட்டணமாக வசூலிக்கப்படும் நிலையில் பேருந்து கட்டணம் ரூ. 81 என்பது பெரும்பாலானவர்களுக்கு பெரும் சுமையாக இருந்துவருகிறது.
இந்நிலையில் சோதனை அடிப்படையில் மீண்டும் 10 சாதாரண கட்டண பேருந்துகள் வேலூரிலிருந்து சென்னைக்கு ஜூலை 1-ம் தேதிமுதல் இயக்கப்படுகின்றன. வேலூரிலிருந்து சென்னைக்கு இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை இயக்கப்படும் இந்தப் பேருந்துகளில் ரூ. 61 மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மேலும் இந்த சாதாரணக் கட்டணப் பேருந்துகள் சென்னை வழித்தடத்திலுள்ள அனைத்து நிறுத்தங்களிலும் நின்று செல்லும். ரூ. 20 வரை கட்டணம் குறைவு என்பதால் சென்னைக்குச் செல்லும் சில பயணிகளும், தங்கள் ஊர்களிலும் நின்று செல்வதால் சென்னைக்குச் செல்லும் வழியிலுள்ள ஊர்களைச் சேர்ந்த பயணிகளும் இந்தப் பேருந்தில் விரும்பி பயணிக்கின்றனர்.
இதுகுறித்து போக்குவரத்துக் கழக அதிகாரி ஒருவர் கூறியது:
வெள்ளோட்டமாக 10 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பயணிகளிடம் இருக்கும் வரவேற்பையடுத்து இந்த பேருந்துகளை நீட்டிப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றார் அவர்.
இதுகுறித்து பேருந்து நடத்துநர் ஒருவர் கூறியது:
வேலூரிலிருந்து புறப்படும் சாதாரணக் கட்டணப் பேருந்துகள் அலமேலுரங்காபுரம், விஷாரம் அப்போலோ, ஆர்க்காடு, முத்துகடை, ராணிப்பேட்டை, வாலாஜா, காவேரிப்பாக்கம், ஓச்சேரி, பாலுசெட்டிசத்திரம், சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதூர், பூந்தமல்லி, போரூர், கிண்டி, கோயம்பேடு ஆகிய நிறுத்தங்களில் நின்றுசெல்லும். அனைத்து நிறுத்தங்களிலும் நிற்பதால் சில பயணிகள் இந்தப் பேருந்தில் ஏறுவதில்லை. அதேநேரத்தில் குடும்பத்துடன் வரும் பயணிகள் டிக்கெட்டுகளுக்கு ரூ. 20 வரை குறைவதால் மகிழ்ச்சியடைகின்றனர் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.