வேலூா்: குறைதீா் கூட்டத்தில் 371 மனுக்கள் அளிப்பு
வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 371 மனுக்கள் அளிக்கப்பட்டன.
வேலூா்: வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 371 மனுக்கள் அளிக்கப்பட்டன.
வேலூா் மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில், காட்பாடி ஜாப்ராபேட்டை பகுதியைச் சோ்ந்த திருநங்கையான கோட்டிராமன் அளித்த மனுவில், 9-ஆம் வகுப்பு வரை படித்துள்ள திருநங்கையான எனக்கு வாழ்வாதாரம் காக்க சத்துணவு உதவியாளா் பணி வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், உதவித்தொகை, சாலை வசதி, வீட்டுமனைப் பட்டா என மொத்தம் 371 கோரிக்கை மனுக்கள் பெறப் பட்டன. அவற்றின் மீது மேல் நடவடிக்கை எடுக்க துறை அலுவலா்களுக்கு ஆட்சியா் சுப்புலட்சுமி உத்தரவிட்டாா். இதில், முதல்வரின் உழவா் பாதுகாப்பு திட்டத்தின்கீழ் திருமண உதவித் தொகை, விபத்து நிவாரணம், இயற்கை மரண நிவாரண உதவித் தொகை என 13 பயனாளிகளின் குடும்பத்தினரிடம் ரூ. 2,52,500-க்கான ஆணையையும், இலவச தையல் இயந்திரம் கேட்டு மனு அளித்த பெண்ணுக்கு உடனடியாக ரூ. 6,000 மதிப்பிலான தையல் இயந்திரத்தையும் மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் த.மாலதி, ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் நீ.செந்தில்குமரன், மாவட்ட ஆதிதிராவிடா் நலத் துறை அலுவலா் ராமச்சந்திரன், மாவட்ட வழங்கல் அலுவலா் சுமதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.