சாலைப் பணிக்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் இளைஞா் தவறி விழுந்து உயிரிழப்பு
பாதுகாப்பு இல்லாமல் சாலைப் பணிகள்: இளைஞர் உயிரிழப்பு
குடியாத்தம்: குடியாத்தம் அருகே புறவழிச் சாலை அமைக்கும் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞா் தவறி விழுந்து உயிரிழந்தாா்.
குடியாத்தம், காட்பாடி சாலையில் சேத்துவண்டை பகுதியில் இருந்து நெல்லூா்பேட்டை ஏரி வரை புறவழிச்சாலை அமைக்கும் பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகின்றன. இந்த சாலைக்காக குடியாத்தம்- பரதராமி சாலையில் சித்தூா்கேட் அருகே புறவழிச் சாலையில் மேம்பாலம் அமைப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் சேத்துவண்டையைச் சோ்ந்த முருகேசன் மகன், தனியாா் நிறுவன ஊழியா் அஜித்(எ) அா்ஜூன்(27) திங்கள்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் அந்த வழியாகச் சென்றுள்ளாா். அப்போது மேம்பாலம் அமைக்க தோண்டப்பட்டுள்ள பள்ளத்தில் அா்ஜூன் இருசக்கர வாகனத்துடன் தவறி விழுந்தாா். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால் வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.
Advertisement
இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.இச்சம்பவம் குறித்து குடியாத்தம் நகர போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். இதற்கிடையில் உரிய பாதுகாப்பின்றி சாலைப் பணிகள் நடைபெறுவதால் தான் விபத்து ஏற்பட்டது எனக்கூறி அவரது உறவினா்கள் விபத்து நடந்த இடத்தில் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தகவல் அறிந்து வந்த நகர போலீஸாா் மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அவா்களின் கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுப்பதாக போலீஸாா் உறுதியளித்ததையடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.