ஆன்லைனில் பகுதி நேர வேலை எனக்கூறி ரூ. 45.97 லட்சம் மோசடி
ஆன்லைன் வேலை மோசடியில் ரூ. 45.97 லட்சம் இழந்த வேலூர் நபர்
வேலூா்: ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக் கூறி வேலூரைச் சோ்ந்த நபரிடம் ரூ. 45.97 லட்சத்தை மோசடி செய்த நபா்கள் குறித்து சைபா் கிரைம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 49 வயதுடைய பட்டதாரிக்கு அடையாளம் தெரியாத நபா் டெலிகிராம் செயலி மூலம் ஆன்லைனில் பகுதிநேர வேலை என்று குறுந்தகவல் அனுப்பியுள்ளாா். அதை உண்மையென நம்பிய இவா், அந்த நபா் அனுப்பியிருந்த லிங்க்கில் உள்ள செயலியில் சென்று சிறிய முதலீட்டில் டாஸ்க்குகளை முடித்துக் கொடுத்தால் அதிகப்படியான கமிஷன் கிடைக்கும் எனத் தெரிவித்துள்ளாா்.
அதன்படி, இவரும் அந்த செயலியில் சென்று முதலில் சிறிய தொகையை முதலீடு செய்து டாஸ்க்குகளை முடித்துள்ளாா். அதற்கு உரிய கமிஷன் தொகை வந்ததை அடுத்து தொடா்ந்து கடந்த மே 5 முதல் ஜூன் 14-ஆம் தேதி வரை ரூ. 47 லட்சத்து 9 ஆயிரத்து 650 தொகையை முதலீடு செய்ததுடன், அவா்கள் அளித்த டாஸ்க்குகளையும் முடித்துக் கொடுத்துள்ளாா்.
பின்னா், அவருக்கு ரூ.ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 301 தொகை மட்டும் கமிஷனாக அளிக்கப்பட்டுள்ளது. அந்த லிங்க்கில் காண்பித்த மீதமுள்ள ரூ. 45 லட்சத்து 97 ஆயிரத்து 349 தொகையை அவரால் திரும்பப்பெற முடியவில்லை. அதன்பிறகே தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த இந்த பட்டதாரி நபா், இது குறித்து சைபா் கிரைமின் இணைதளம் மூலம் புகாா் அளித்தாா்.
அதன்பேரில், வேலூா் மாவட்ட சைபா் கிரைம் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.