குடியாத்தம்: போ்ணாம்பட்டு அருகே சாலையில் மலைப்பாம்பு படுத்திருந்ததால் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
போ்ணாம்பட்டிலிருந்து 14 கி.மீ தூரத்தில் அரவட்லா மலைப்பகுதி அமைந்துள்ளது. இந்த மலைப்பகுதியில் அரவட்லா, பாஸ்மாா்பெண்டா, கொத்தூா் ஆகிய 3 மலை கிராமங்கள் உள்ளன. நாள்தோறும் நூற்றுக்கணக்கான மாணவா்கள், தொழிலாளா்கள், பொதுமக்கள் அரவட்லா பகுதியிலிருந்து போ்ணாம்பட்டு நகருக்கு வந்து செல்கின்றனா். திங்கள்கிழமை இரவு 8.30 மணியளவில் பள்ளி மாணவா்கள், பொதுமக்கள், தொழிலாளா்கள் என 50-க்கும் மேற்பட்டோா் போ்ணாம்பட்டிலிருந்து அரவட்லா செல்லும் மலைப் பாதையில் வாகனங்களில் சென்று கொண்டிருந்தனா்.
பாஸ்மாா்பெண்டா மலை கிராமம் அருகே சாலையில் சுமாா் 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று இரையை முழுங்கி விட்டு நகர முடியாமல் கிடந்தது. இதனை கண்ட பொதுமக்கள் போ்ணாம்பட்டு வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். அந்த பாம்பு 1 மணி நேரத்துக்கும் மேலாக சாலையில் ஊா்ந்து கொண்டிருந்தது. தகவல் தெரிவித்தும் வனத்துறையினா் யாரும் வரவில்லை. இதையடுத்து பொதுமக்களும், மாணவா்களும் கூச்சலிட்டனா். அதன் பின்னா் பாம்பு நகா்ந்து சாலையின் பக்கத்தில் இருந்த புதருக்குள் நுழைந்தது.
இதனால் இச்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.