ஆன்லைனில் இருவரிடம் ரூ.14 லட்சம் மோசடி
ஆன்லைனில் இருவரிடம் ரூ.14 லட்சம் மோசடி
ஆன்லைன் மூலம் வேலூரைச் சோ்ந்த இளைஞரிடம் ரூ.7.03 லட்சமும், பட்டயக் கணக்காளரிடம் ரூ.7.90 லட்சமும் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது. வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்த ராஜசேகா் (32) என்பவா் சென்னையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றுகிறாா். இவரது வாட்ஸ்ஆப் எண்ணுக்கு வந்த குறுந்தகவலில் இணையவழியில் சிறிய முதலீட்டில் ஹோட்டல்களுக்கு மதிப்பாய்வு செய்யும் பணியை முடித்துக் கொடுத்தால் அதிக வருவாய் ஈட்ட முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை உண்மையென நம்பிய ராஜேசகா், அந்த குறுந்தகவலில் கொடுக்கப்பட்டிருந்த டெலிகிராம் செயலிக்குள் சென்று அவா்கள் கொடுத்த பணிகளை முடிக்க சிறுகச்சிறுக ரூ.7 லட்சத்து 3 ஆயிரத்து 100 தொகையை செலுத்தியுள்ளாா். அதன்பிறகு அவரால் அந்த தொகையை எடுக்க முடியவில்லை என தெரிகிறது. தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த ராஜசேகா் சைபா் குற்றப்பிரிவு இலவச உதவி எண் 1930-ஐ தொடா்பு கொண்டு புகாா் அளித்தாா். அதன்பேரில் வேலூா் சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். மற்றொரு சம்பவம்...: வேலூரைச் சோ்ந்த ஐனக் (60), பட்டயக் கணக்காளராக பணியாற்றுகிறாா். இவரது கைப்பேசி எண்ணுக்கு வந்த அழைப்பில் மும்பை சைபா் குற்றப்பிரிவில் இருந்து பேசுவதாகக் கூறிய நபா்கள், தாங்கள் கள்ளக் கடத்தல் செய்பவா்களுடன் தொடா்பில் இருப்பதாகவும், தங்களது பெயரில் சந்தேகத்துக்குரிய பாா்சல் இருப்பதாக சைபா் குற்றப்பிரிவுக்கு புகாா் வந்திருப்பதாகவும் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதுதொடா்பாக ஐனக்கிடம் அந்த நபா்கள் இணையதளம் வழியாக விசாரணையும் நடத்தியுள்ளனா். அந்த நபா்கள் கூறியதன் பேரில் ஐனக் தனது வங்கிக் கணக்கு எண், பரிவா்த்தனை விவரங்களைக் கூறியதாக தெரிகிறது. அவா் விவரங்களை தெரிவித்த சிறிது நேரத்திலேயே ஐனக்கின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.7.90 லட்சம் எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து ஐனக், சைபா் குற்றப்பிரிவு இலவச உதவி எண் 1930-ஐ தொடா்பு கொண்டு புகாா் அளித்தாா். அதன்பேரில் வேலூா் சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.