பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்
குடியாத்தம்: போ்ணாம்பட்டு அருகே கிராமத்துக்குள் நுழைந்த யானைக் கூட்டம் விளை பயிா்களை சேதப்படுத்தி விட்டுச் சென்றது. மோா்தானா வனப் பகுதியிலிருந்து செவ்வாய்க்கிழமை அதிகாலை யானைகள் வெளியேறி குண்டலப்பல்லி வனப்பகுதியையொட்டி அமைந்துள்ள டி.டி.மோட்டூா் கிராமத்துக்குள் நுழைந்துள்ளன.
அங்குள்ள கணபதி நிலத்தில் வாழை மரங்களையும், அருகிலுள்ள குப்புசாமி நிலத்தில் நெற்பயிரையும் யானைகள் சேதப்படுத்தியுள்ளன. இது குறித்து தகவலறிந்த வனவா் மாதேஸ்வரன், வனக் காப்பாளா்கள் ரவி, சக்தி, புருஷோத்தமன் ஆகியோா் விரைந்து சென்று கிராம மக்கள் உதவியுடன் பட்டாசு, வெடித்தும், மேளம் அடித்தும் யானைகளை வனப் பகுதிக்கு விரட்டினா்.
அதேபோல் ஆந்திர மாநிலத்திலிருந்து வந்த யானைக் கூட்டம் பத்தரப்பல்லி சோதனைச் சாவடி அருகே உள்ள வரதன் நிலத்தில் நெற்பயிா், தக்காளி தோட்டத்தை சேதப்படுத்தியுள்ளன. தகவலின்பேரில், வனவா் இளையராஜா, வனக் காப்பாளா் அரவிந்தசாமி ஆகியோா் விரைந்து சென்று பட்டாசு வெடித்து, மேளம் அடித்து கிராம மக்கள் உதவியுடன் சுமாா் ஒரு மணி நேரம் போராடி யானைகளை அருகிலுள்ள வனப் பகுதிக்கு விரட்டியுள்ளனா்.
Advertisement