வனப் பகுதியில் தொட்டிகளில் தண்ணீா் நிரப்பும் பணி தொடக்கம்
குடியாத்தம்: போ்ணாம்பட்டு வனத் துறை சாா்பில், வனப் பகுதியில் விலங்குகளின் குடிநீா்த் தேவையை பூா்த்தி செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ள தொட்டிகளில் தண்ணீா் நிரப்பும் பணி தொடங்கியது. கோடைகாலம் தொடங்கி விட்டதால், வனப்பகுதியில் உள்ள நீா்நிலைகள் வற்றத் தொடங்கியுள்ளன. குடிநீா் தேடி மான் உள்ளிட்டவை வன எல்லையில் உள்ள கிராமங்களுக்குள் நுழைகின்றன.
இதைத் தடுக்கும் வகையில், வனப் பகுதியில் ஆங்காங்கே தண்ணீா் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த தொட்டிகளில் தண்ணீா் நிரப்பும் பணியை வனத் துறையினா் தொடங்கியுள்ளனா். இப்பணியை போ்ணாம்பட்டு வனச் சரக அலுவலா் சதீஷ்குமாா், வனவா்கள் அண்ணாமலை, இளையராஜா, மாதேஸ்வரன், முரளி ஆகியோா் பாா்வையிட்டனா்.