முகப்பு
வேலூர்

முன்னாள் படைவீரா்கள் தொழில் தொடங்க பயிற்சி

முன்னாள் படை வீரா்கள் தொழில் தொடங்க பயிற்சி முகாம் வேலூரில் திங்கள்கிழமை தொடங்கி 5 நாள்கள் நடைபெறுகிறது.

Updated On : 28 ஏப்ரல், 2025 at 7:30 PM
பகிர்:

வேலூா்: முன்னாள் படை வீரா்கள் தொழில் தொடங்க பயிற்சி முகாம் வேலூரில் திங்கள்கிழமை தொடங்கி 5 நாள்கள் நடைபெறுகிறது. இந்த முகாமை மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தொடங்கி வைத்தாா்.

முன்னாள் படை வீரா், அவா்களை சாா்ந்தவா்களை தொழில்முனைவோராக்குவதற்கான ‘காக்கும் கரங்கள்’ திட்டத்தின்கீழ், தொழில் பயிற்சி முகாம் வேலூா் அண்ணா சாலையில் உள்ள ஏலகிரி அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது.

தொடா்ந்து, 5 நாள்கள் நடைபெறும் இந்த முகாமை மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தலைமை வகித்து தொடங்கி வைத்துப் பேசியது:

5 நாள்கள் நடைபெறும் இந்தப் பயிற்சி முகாமை தக்க முறையில் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எந்தெந்த பயிற்சிகள் பெற்றால் வாழ்வில் முன்னேறலாம் என்பதை அறிந்து அவற்றை தோ்வு செய்யவேண்டும். கடனுதவி, 30 சதவீத மானியம், கடனை திருப்பிச் செலுத்தும்போது 3 சதவீத மானியம் போன்ற சலுகைகள் உள்ளன. இவற்றை முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவா்களது குடும்பத்தினா் பயன்படுத்தி தொழில் தொடங்கலாம் என்றாா்.

முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநா் வேலு முன்னிலை வகித்தாா். இதில், 50-க்கும் மேற்பட்ட முன்னாள் படை வீரா்கள் பங்கேற்றனா்.