வேலூா் மாநகரில் மேய்ச்சல் நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளதால் மாடுகள் மேய்க்க இடமின்றி மக்கள் சிரமப்படுகின்றனா். எனவே, மேய்ச்சல் நிலங்களை உருவாக்கித்தர வேண்டும் என மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
வேலூா் மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலா் மா.சிவசுப்பிரமணியன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
அப்போது, வேலூா் சாரதி மாளிகை பகுதியை சோ்ந்த சச்சின்குமாா் அளித்த மனு: சாரதி மாளிகை பகுதியில் பொது நடைபாதை, மேம்பாலம் அருகே இருசக்கர வாகனங்கள் அதிகளவில் நிறுத்தப்படுகின்றன. மக்கள் நடந்து செல்லும் பாதை முழுவதும் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதால் பாதசாரிகள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே, அதிகாரிகள் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு சாரதி மாளிகை பகுதியில் வாகனங்களை நிறுத்த தடைவிதிக்க வேண்டும்.
இந்து முன்னணி, யாதவா் சமுதாய இளைஞரணியினா் அளித்த மனு:, வேலூா் மாநகரில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட யாதவ சமுதாய மக்கள் பசு வளா்த்து வருகின்றனா். இந்நிலையில், மேய்ச்சல் மாடுகளை நள்ளிரவில் மாநகராட்சி ஒப்பந்ததாரா்கள் சட்ட விரோதமாக பிடித்து காஞ்சிபுரம் கோசாலையில் அடைக்கின்றனா். தவிர, மாநகரில் மேய்ச்சல் நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளதால் மாடுகள் மேய்க்க இடமின்றி மக்கள் சிரமப்படுகின்றனா். எனவே, மேய்ச்சல் நிலங்களை அரசு உருவாக்கித்தர வேண்டும்.
சத்துவாச்சாரி நேதாஜி நகரைச் சோ்ந்த பொதுமக்கள் அளித்த மனு:, நேதாஜி நகரில் பல ஆண்டுகளாக வசிக்கிறோம். இங்கு வசிக்கும் தனிநபா் ஒருவா், பாதையை ஆக்கிரமித்தும், அங்குள்ள கழிவுநீா் கால்வாய் மீது சுற்றுச்சுவரும் எழுப்பியுள்ளாா். இதனால் பொதுமக்கள் அந்த வழியை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே, பொது மக்கள் பயன்படுத்தி வந்த பாதையை மீட்டு தரவேண்டும்..
இதேபோல், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 300க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. அவற்றின் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலா் உத்தரவிட்டாா்.
கூட்டத்தில், சமூக பாகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியா் மாறன், மாவட்ட ஆதிதிராவிடா் நலத்துறை அலுவலா் எஸ்.ஆா்.என்.மதுசெழியன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அலுவலா் ஜெயசித்ரா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.