முகப்பு
மேய்ச்சல் நிலம்
நடுப்பக்கக் கட்டுரைகள்

மேய்ச்சல் நிலம் மேய்ப்பதற்கே...

மேய்ச்சல் நிலம் மூலம் பூமியில் மூன்றில் ஒரு பங்கு கரிமம் சேமிக்கப்படுகிறது.

நடுப்பக்கக் கட்டுரைகள்

மேய்ச்சல் நிலம் மேய்ப்பதற்கே...

மேய்ச்சல் நிலம் மூலம் பூமியில் மூன்றில் ஒரு பங்கு கரிமம் சேமிக்கப்படுகிறது.

Updated On : 2 மார்ச், 2026 at 10:42 PM
மேய்ச்சல் நிலம்
பகிர்:

பெ. விவேகானந்தன்

'மேய்ச்சல் நிலம் மற்றும் கிடைக்காரர்கள் சர்வதேச ஆண்டு 2026 என அறிவிக்கும் தீர்மானம் நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் 15.03.2022 அன்று நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானத்தை மங்கோலியா நாடு முன்மொழிந்தது. இதற்கு இந்தியா உள்பட 60 நாடுகளும் மற்றும் பன்னாட்டு கால்நடை ஆய்வு நிறுவனம் உள்பட 450-க்கும் மேற்பட்ட அமைப்புகளும் ஆதரவு அளித்தன.

உலகளாவிய புல்வெளி பாதுகாப்பு சம்மேளனம், கிடைக்காரர்களின் கூட்டமைப்பு, சர்வதேச இயற்கை பாதுகாப்பு ஒன்றியம் (ஐயுசிஎன்) மற்றும் மேய்ச்சல் கிடைக்காரர்கள் அறிவு மையம் போன்ற அமைப்புகள் 2016-இல் சர்வதேச மேய்ச்சல் நிலம் மற்றும் கிடைக்காரர்கள் ஆண்டு என அறிவிக்க ஒருமித்த கருத்து மூலம் பேசி முடிவு செய்யப்பட்டது. கிடைக்காரர்கள் கூட்டமைப்பில் நானும் (கட்டுரையாளர்) ஒருவராக இடம்பெற்றிருந்தேன். பின்னர், மங்கோலிய நாட்டின் உதவியுடன் 2019-இல் ஐ.நா.சபை பொதுக் குழுவில் தீர்மானம் கொண்டுவரப்பட்டு, 2022-இல் நிறைவேறப்பட்டது.

பூமியின் நிலப்பரப்பில் சரிபாதியாக மேய்ச்சல் நிலங்கள் இருப்பதால், அவை மிகப்பெரிய சூழல் மண்டலமாக விளங்குகிறது. எனினும், மேய்ச்சல் நிலங்கள் முறையாகப் பாதுகாக்கப்படாததால் பெரும் அழிவுக்கு உள்ளாகியிருக்கின்றன. உலகெங்கிலும் இருக்கக்கூடிய மேய்ச்சல் நிலங்கள் 50 கோடி கிடைக்காரர்களின் வாழ்வாதாரத்துக்கும் உணவுப் பாதுகாப்புக்கும் ஆதரவாக விளங்குகின்றன. மேய்ச்சல் சமூகத்தினர் உற்பத்தி செய்யும் கால்நடைப் பொருள்கள் உலகெங்கும் வாழும் பல லட்சக்கணக்கான மக்களுக்குக் கிடைத்து வருகின்றன.

மேய்ச்சல் நிலத்தில் காணப்படும் புல், பூண்டு இவற்றை மேய்ந்து கிடைக்காரர்களுக்கு வாழ்வாதாரம் வழங்கும் கால்நடைகள் இயற்கையான முறையில் பராமரிக்கப்படுகின்றன. இதனால், சமுதாயத்துக்குத் தேவைப்படும் பால், இறைச்சி, முட்டை, உபரி பொருள்களாக ரோமம், தோல் போன்றவையும் கிடைக்கின்றன. நமது நாட்டில் 53 சதவீத பாலும், 74 சதவீத இறைச்சியும் கிடைகளிலிருந்து கிடைப்பதாகக் கூறப்படுகிறது. இதன்மூலம் மக்களுக்கு மலிவான சுத்தமான புரதச் சத்து நிறைந்த உணவு கிடைக்கிறது.

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கால்நடைப் பொருள்கள் 4.5 சதவீதமாக உள்ளது. இதில் கிடைகள் மூலம் மூன்றில் இரண்டு மடங்கு பங்களிப்பாகவும் கணக்கிடப்படுகிறது. இது தவிர பாரம்பரிய கலாசாரத்தை ஊக்குவிக்கும் ஜல்லிக்கட்டு, ரேக்ளா பந்தயம், உழவுத் தொழில் மாட்டு வண்டிகளுக்கு தேவைப்படும் காளைகள் கிடைகளிலிருந்து பெறப்படுகின்றன. கிராமப்புறங்களில் 70 சதவீத மக்களுக்கு பாரம்பரிய கால்நடை வளர்ப்பு மூலம் வேலை வாய்ப்பும் கிடைக்கிறது.

இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட 202 கால்நடை இனங்களில், 75 இனங்கள் கிடைக்காரர்களிடம் காணப்படுகின்றன. இந்தியாவில் 1.3 கோடி கிடைக்காரர்கள் கால்நடைகளைப் பராமரித்து வருகின்றனர்; இவர்கள் 46 சமுதாயங்களைச் சேர்ந்தவர்கள். தமிழ்நாட்டில் தோடர், பர்கூர் லிங்காயத், யாதவர், குறும்பக்கவுண்டர், வன்னியர் மற்றும் பிற சமுதாயங்களைச் சேர்ந்தவர்கள் கிடைக்காரர்களாக உள்ளனர்.

பருவ காலங்களுக்கு ஏற்ப பல மைல் தொலைவு ஊர்விட்டு ஊர் சென்று குடும்பத்துடன் கால்நடைகளை ஓட்டி சென்று மேய்ப்பார்கள்; அங்கேயே சில மாதங்கள் தங்கி பிறகு ஊர் திரும்புவர். குறிப்பாக, வெள்ளாமை மாதங்களான ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை மாதம் வரை வனப் பகுதிகளுக்குச் சென்று மேய்ப்பர். அறுவடைக்குப் பிறகு, விவசாய நிலங்களில் பகலில் மேய்த்து இரவில் கிடை அமர்த்துவார்கள். இதனால், விவசாய நிலத்துக்கு இயற்கை உரம் கிடைக்கும். இந்த பட்டிக் கலாசாரம் பல நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக நீடிக்கிறது.

கடந்த 60 ஆண்டுகளில் பாரம்பரிய மேய்ச்சல் நிலத்திலிருந்து கட்டாய வெளியேற்றம், மேய்ச்சல் நில ஆக்கிரமிப்பு, மேய்ச்சல் அல்லாத பிற பயன்பாட்டுக்கு மேய்ச்சல் நிலத்தைப் பயன்படுத்துதல், கால்நடைகள் செல்லும் நடைபாதை இடைமறிப்பு ஆகியன மேய்ச்சல் சமூகத்தினர் சந்தித்து வரும் இடர்ப்பாடுகள். வனங்களில் மேய்க்கும் பாரம்பரிய உரிமையை வன உரிமைச் சட்டம் 2006 அங்கீகரித்தாலும் இன்னும் அது செயல்படுத்தப்படவில்லை.

பல்லுயிர் பெருக்கத்தை அதிகரிப்பதிலும், சுற்றுச்சூழலுக்கு உதவும் வகையிலும், மீத்தேன் வெளிப்பாட்டைக் குறைப்பதிலும், நீர்நிலைகளைப் பாதுகாப்பதிலும் மேய்ச்சல் சமூகத்தினர் முக்கியப் பங்காற்றுகின்றனர். வனத்திலுள்ள மரங்களைவிட புல்வெளிப் பகுதி கரிமத்தை கிரகித்து நிலத்துக்கு அடியில் தக்கவைத்துக் கொள்ளும் திறன் அதிகமாக உள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. மேய்ச்சல் நிலம் மூலம் பூமியில் மூன்றில் ஒரு பங்கு கரிமம் சேமிக்கப்படுகிறது. இது காலநிலை மாற்றத்தைத் தணிப்பதற்கும், பல்லுயிர் பெருக்கத்துக்கும் வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள மக்களின் உணவுப் பாதுகாப்புக்கும் உதவுகிறது.

மேய்ச்சல் நிலம் இயற்கையின் உதவியால் சுயமாகவே தன்னை உயிர்ப்பித்துக் கொள்கிறது. மேய்ச்சல் நிலத்தில் மரங்களை நட்டு வனமாக மாற்றும் முறை உகந்ததல்ல எனக் கூறப்படுகிறது. காட்டுத்தீ பரவாமல் தடுக்க மேய்ச்சல் நிலம் உதவுகிறது.

நீடித்த மேய்ச்சல் முறை, வளமான மேய்ச்சல் நிலங்கள் மூலம் கிடைக்கிற நன்மைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். எஞ்சியுள்ள மேய்ச்சல் நிலங்களை வேறு பயன்பாட்டுக்குப் பயன்படுத்தாமலும், ஆக்கிரமிப்புகளை அடையாளம் பார்த்து அகற்றுவதிலும், பயன்படாத தரிசு நிலத்தில் மீண்டும் புல்வெளி உண்டாக்குவதிலும் முனைப்பாக செயல்பட வேண்டும். இந்தியாவில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் சுமார் 25 ஏக்கர் நிலத்தில் மேய்ச்சல் நிலங்களைப் பாதுகாத்து பராமரிக்க மத்திய மீன், கால்நடை மற்றும் பால்வள அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியது வரவேற்கத்தக்கது. மேய்ச்சல் நிலம் மேய்ப்பதற்கே; மேய்ச்சல் தொழில் நிலைப்பதற்கே...

முழு கட்டுரையைப் படிக்க →