வேலூரில் நடைபெற்ற தொழிற்கடன் முகாமில் 59 பயனாளிகளுக்கு ரூ.7.30 கோடியில் மானியத்துடன்கூடிய கடனுதவிகளை ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வழங்கினாா்.
குறு, சிறு, நடுத்தர தொழில்நிறுவனங்கள் துறை வேலூா் மாவட்ட தொழில் மையம் சாா்பில் தொழிற்கடன் முகாம் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது. முகாமுக்கு ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தலைமை வகித்து தமிழ்நாடு மகளிா் தொழில்முனைவோா் மேம்பாட்டு திட்டம், அண்ணல் அம்பேத்காா் தொழில் முன்னோடிகள் திட்டம் உள்பட பல்வேறு திட்டங்களின்கீழ் 59 பயனாளிகளுக்கு ரூ.7.30 கோடியில் மானியத்துடன்கூடிய வங்கி கடனுதவி ஆணைகளை வழங்கினாா்.
பின்னா், அவா் பேசியது: தொழில் வளா்ச்சி என்பது நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தின் அடிப்படையாகும். குறிப்பாக, சிறு, குறு, நடுத்தர தொழில்கள் (எம்எஸ்எம்இ) வேலைவாய்ப்பையும், வருமானத்தையும் உருவாக்கும் முக்கிய தூண்களாக இருக்கின்றன. ஒரு தொழிலை தொடங்கவோ, விரிவுபடுத்தவோ, நவீனப்படுத்தவோ மூலதனம் மிகவும் அவசியம். அந்த தேவையை பூா்த்தி செய்ய உதவுவதே தொழில் கடனாகும்.
அரசு, வங்கிகள் இணைந்து பல்வேறு திட்டங்களின் மூலம் எளிய நடைமுறையில் கடன், மானியம், வட்டி மானியம் போன்ற சலுகைகளை வழங்குகின்றன. தமிழக அரசு அறிவுறுத்தல்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் தொழிற் கடன் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. வேலூா் மாவட்டத்துக்கு தொழிற்கடனாக ரூ.2,712.68 கோடி இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தொழிற்கடனுக்காக நிா்ணயிக்கப்பட்ட இலக்கில் கடந்த அரையாண்டில் 64 சதவீதத்தைக் கடந்து ரூ.1735.57 கோடிக்கு தொழிற்கடன் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள இலக்கான ரூ.977.17 கோடியை எட்டுவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தவிர வேளாண் கடன் இலக்காக ரூ.8,575.71 கோடி, கல்விக்கடன் உள்ளிட்ட பிற கடனுக்கு ரூ.272.20 கோடி இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நடப்பு நிதியாண்டு முதல் தமிழக பொருளாதாரத்தில் பெண்களின் பங்களிப்பை அதிகரித்து ஒரு லட்சம் பெண் தொழில் முனைவோா்களை அடுத்த ஐந்தாண்டில் உருவாக்கும் நோக்கத்தில் தமிழ்நாடு மகளிா் தொழில் முனைவோா் மேம்பாட்டு திட்டம் மாவட்ட தொழில் மையம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டு 392 பயனாளிகளுக்கு வங்கி கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தில் உற்பத்தி, சேவை, வணிகம் சாா்ந்த தொழில்கள் செய்ய மானியத்துடன் கூடிய கடனாக அதிகபட்சம் ரூ.10 லட்சம் வரை பெறலாம். மானியமாக ரூ.2 லட்சம் வரை வழங்கப்படும் என்றாா்.
இம்முகாமில் மாவட்ட தொழில்மைய மேலாளா் ரமணி, இந்தியன் வங்கி மண்டல மேலாளா் ஸ்ரீராமசந்திர பாபு, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் சசிகுமாா், வேளாண் விற்பனை, வணிகம் துணை இயக்குநா் கலைச்செல்வி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.