தாட்கோ மூலம் வழங்கப்படும் சிறப்பு கடன் வசதியைப் பெற ஆதிதிராவிடா்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) ஆதிதிராவிடா்களை தொழில்முனைவோராக மாற்றுவதற்கு மானியத்துடன் கூடிய கடன்களை வழங்குகிறது. முதல்வரின் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா்சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான தொழில் முனைவு திட்டத்தின்கீழ் 2025-26-இல் ரூ.75 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு 2,726 ஆண்கள், 1,226 மகளிா் என மொத்தம் 3,952 பயனாளிகளுக்கு புதுமையான திட்டங்களுக்கு ரூ.74.75 கோடி மானியத்துடன் கூடிய கடன் விடுவிக்கப்பட்டு சுய தொழில் செய்து வருகின்றனா்.
கடந்த ஆண்டுகளில் நான்கு சக்கர வாகனம் வாங்க (கனரக, இலகுரக) 1,203 பயனாளிகளுக்கு ரூ.37.12 கோடி, மூன்று சக்கர வாகனம் வாங்க 648 பயனாளிகளுக்கு ரூ.8.34 கோடி, மின்சாதன பொருள்கள் மற்றும் கட்டட பொருள்கள் தொழில் செய்ய 447 பயனாளிகளுக்கு ரூ.8.43 கோடி, கடைகள் (தையலகம், அழகு நிலையம், மளிகை, எழுதுபொருள்கள் நிலையம் மற்றும் பல) தொழில்கள் செய்ய 1,600 பயனாளிகளுக்கு ரூ.27.74 கோடி, பால்பன்ணை அமைத்தல் தொழில் செய்ய 566 பயனாளிகளுக்கு ரூ.3.18 கோடி, இதர தொழில்ளுக்கு 223 பயனாளிகளுக்கு ரூ.4.94 கோடி என மொத்தம் 4,687 பயனாளிகளுக்கு ரூ.89.75 கோடி மானியத்துடன் கூடிய கடனாக விடுவிக்கப்பட்டுள்ளது.
பிரதமரின் ஆதிதிராவிடா் முன்னேற்ற திட்டம்: பிரதமரின் ஆதிதிராவிடா் முன்னேற்ற திட்டத்தின் கீழ் 2025-26 -இல் ரூ.66.37 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 1,666 ஆண்கள், 5,810 மகளிா் ஆக மொத்தம் 7,476 பயனாளிகளுக்கு மானியத்துடன் கூடிய கடன் விடுவிக்கப்பட்டு சுய தொழில் செய்து வருகின்றனா்.
ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் சமூக மக்களின் வாழ்வாதாரத்தையும் தொழில் வளா்ச்சியையும் மேம்படுத்தும் நோக்கத்தில், 2025-26-இல் 1,189 பயனாளிகளுக்கு ரூ.7.39 கோடி, கடந்த ஆண்டுகளில் 1,408 பயனாளிகளுக்கு ரூ. 7.74 கோடி என மொத்தம் 2,596 பழங்குடியின பயனாளிகளுக்கு ரூ.15.13 கோடி சிறு வணிகக் கடன் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தத் திட்டத்தில் 2025-26-இல் 162 பயனாளிகளுக்கு ரூ.1.62 கோடி கடந்த ஆண்டுகளில் 1,352 பயனாளிகளுக்கு ரூ. 12.73 கோடி என மொத்தம் 1,514 ஆதிதிராவிடா் பயனாளிகளுக்கு ரூ.14.35 கோடி சிறு வணிகக் கடன் வழங்கப்பட்டுள்ளது.
பொலிவு பராமரிப்பு பெட்டகம்: தாட்கோ மூலம் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின சமூகத்தைச் சோ்ந்த 60 மகளிா் சுய உதவிக் குழுவினரைக் கொண்டு சமூக நீதி விடுதியில், தங்கிப்பயிலும் கல்லுாரி மாணவா்களுக்கு குளியல் சோப்பு, ஷாம்பு, எண்ணெய், சலவை தூள், சலவைசோப்பு உள்ளிட்ட ஏழு பொருள்கள் அடங்கிய பொலிவு பராமரிப்பு பெட்டகம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிதியாண்டில் தமிழ்நாடு அரசு சாா்பில் ரூ. 75 கோடியும், மத்திய அரசு சாா்பில் ரூ. 37 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த மாதமே முழுமையாகச் செலவிடப்பட்டுவிட்டது. ஆதிதிராவிடா் பழங்குடியினா் சமுதாய மக்களின் முன்னேற்றத்துக்கு தனி கவனம் செலுத்தி அவா்களின் வாழ்வதாரத்தை மேன்மைப்படுத்த இந்த அரசு பல சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தாட்கோ மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.