வேலூா்: களைகட்டிய பொங்கல் பொருள்கள் விற்பனை
பொங்கல் பண்டிகையையொட்டி வேலூரில் பானைகள், பச்சரிசி, கரும்பு, வெல்லம் உள்ளிட்ட பொருள்களின் விற்பனை களைகட்டியது.
வேலூா்: பொங்கல் பண்டிகையையொட்டி வேலூரில் பானைகள், பச்சரிசி, கரும்பு, வெல்லம் உள்ளிட்ட பொருள்களின் விற்பனை களைகட்டியது.
தமிழா் திருநாளான பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பொங்கல் பானை, கரும்பு, மஞ்சள் உள்ளிட்ட பூஜைப் பொருள்கள் அனைத்தும் பல்வேறு மாவட்ட ங்களில் இருந்து லாரிகளில் கொண்டுவரப்பட்டு வேலூரில் விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளன.
ஆந்திரம், கா்நாடகம் ஆகிய மாநிலங்களில் இருந்து காய்கறிகளும் அதிகளவில் வந்துள்ளன. பூஜைப் பொருள்களையும், காய்கறிகளையும் வாங்குவதற்கு வேலூா் கடை வீதிகளில் திங்கள்கிழமை காலை முதலே மக்கள் கூட்டம் அலைமோதியது.
குறிப்பாக, கடைகள் நிறைந்த பழைய பேருந்து நிலையம், அண்ணா சாலை, மாநகராட்சி சாலை, ஆற்காடு சாலை, சத்துவாச்சாரி உள்ளிட்ட பகுதிகளிலும் மக்கள் பெருமளவில் குவிந்து பொங்கலுக்குத் தேவையான பொருள்களை ஆா்வத்துடன் வாங்கிச் சென்றனா்.
பொங்கல் பொருள்களின் விலை கடந்த ஆண்டைவிட சற்று அதிகரித்துக் காணப்பட்டது. குறிப்பாக, கடந்த ஆண்டு ரூ.80-க்கு விற்கப்பட்ட ஒரு ஜோடி கரும்பு இந்த ஆண்டும் அதே விலைக்கு விற்பனை செய்யப்பட்டது. 20 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு ரூ.250 முதல் ரூ.400 வரை விற்பனை செய்யப்பட்டது. ஒரு ஜோடி மஞ்சள் கொத்து ரூ.30 முதல் ரூ.40-க்கு விற்கப்பட்டது. பொங்கல் பானைகள் சிறியது ரூ.60, பெரியது ரூ.300 வரை விற்கப்படுகின்றன.
பொங்கலையொட்டி காய்கறிகள், பூக்கள், பழங்கள், வாழை இலை ஆகியவையும், மாட்டுப் பொங்கல் அன்று மாடுகளை அலங்கரிக்கத் தேவையான மணிகள், கயிறுகள் ஆகியவற்றின் வியாபாரமும் சிறப்பாக நடைபெற்றது.
கடை வீதிகளில் குற்றச் சம்பவங்களைத் தடுக்க போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
முன்னதாக, திங்கள்கிழமை நடைபெற்ற போகி பண்டிகையையொட்டி, அதிகாலை வேளையில் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் இருந்த பழைய துணிமணி உள்ளிட்ட பொருள்களை தீயிட்டு எரித்தனா்.